அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்த ஓ.பன்னீர்செல்வத்தின் மேல்முறையீடு மனு: விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளிவைத்தது சுப்ரீம் கோர்ட்..!!

டெல்லி: அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்த ஓ.பன்னீர்செல்வத்தின் மேல்முறையீடு மனு மீதான விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளிவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்தாண்டு ஜூலை 11ல் நடத்தப்பட்ட அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட நீக்க தீர்மானங்கள், பொதுச்செயலாளர் தேர்தல் ஆகியவற்றிற்கு தடை கோரி ஓ.பன்னீர்செல்வம், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜே.சி.டி. பிரபாகரன் ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களை சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி கடந்த மார்ச் 28ம் தேதி நிராகரித்து உத்தரவிட்டிருந்தார்.

இதை எதிர்த்து தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களையும், சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு கடந்த ஆகஸ்ட் 25ம் தேதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தது. அந்த உத்தரவில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவு சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. தொடர்ந்து, ஓ.பன்னீர்செல்வம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மேல்முறையீடு மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, எஸ்.வி.என்.பட்டி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. ஏற்கனவே ஓ.பன்னீர்செல்வத்தின் சார்பில் மேல்முறையீடு மனு மீதான விசாரணையை ஒரு வாரத்திற்கு தள்ளி வைக்க வேண்டும் என கோரிக்கை கடிதம் அளிக்கப்பட்டிருந்தது.

இதற்கு ஆட்சேபம் தெரிவித்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் விசாரணையை தள்ளி வைக்கக் கூடாது. சிவில் வழக்கை தாமதப்படுத்தும் நோக்கில் இதுபோன்ற மேல்முறையீடு மனுக்களை தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் விசாரணையை தள்ளிவைக்கக்கூடாது என கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்த ஓ.பன்னீர்செல்வத்தின் மேல்முறையீடு மனு மீதான விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளிவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எடப்பாடி தரப்பு ஆட்சேபனை மனு தாக்கல் செய்திருந்த நிலையில், வழக்கு விசாரணை தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

The post அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்த ஓ.பன்னீர்செல்வத்தின் மேல்முறையீடு மனு: விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளிவைத்தது சுப்ரீம் கோர்ட்..!! appeared first on Dinakaran.

Related Stories: