அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மருத்துவ காரணங்களுக்காக ஜாமின் வழங்க மறுப்பு: மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்..!!

டெல்லி: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மருத்துவ காரணங்களுக்காக ஜாமின் வழங்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஜூன் மாதம் கைது செய்யப்பட்டார். மருத்துவ காரணங்களுக்காக இடைக்கால ஜாமின் தரக்கோரி உச்சநீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி மனுத்தாக்கல் செய்திருந்தார். இதனிடையே, செந்தில் பாலாஜியின் மருத்துவ சிகிச்சை தொடர்பான அறிக்கை உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நீதிபதி பேலா எம். திரிவேதி முன்பு வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அச்சமயம், அறிக்கையை மேற்கோள்காட்டி செந்தில்பாலாஜி தரப்பு வழக்கறிஞர் முகுல் ரோத்தகி வாதிட்டார்.

அப்போது, மனுதாரருக்கு பைபாஸ் சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது. செந்தில்பாலாஜியின் மூளைக்கு செல்லும் ரத்தக் குழாயில் சில பிரச்சனைகள் கண்டறியப்பட்டுள்ளன. உரிய சிகிச்சை அளிக்கவில்லை என்றால், brain stroke ஏற்படுத்தும். எனவே மருத்துவ காரணிகளை ஆராய்ந்து மனுதாரருக்கு ஜாமின் வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி, செந்தில் பாலாஜியின் உடலில் இருக்கும் பிரச்னைகளை மருந்துகள் மூலம் குணப்படுத்தலாமே என்று தெரிவித்தார். பைபாஸ் அறுவை சிகிச்சை தற்போது குடல்வால் அறுவை சிகிச்சை போன்று சாதாரணமாகிவிட்டது.

கூகுள் செய்து பார்த்ததில் குணப்படுத்தக் கூடும் என கூறப்படுகிறதே. மருத்துவ காரணங்களுக்காக அல்லாமல் தகுதியின் அடிப்படையில் மட்டுமே ஜாமின் மனுவை பரிசீலிக்க முடியும் என்று தெரிவித்தார். தொடர்ந்து, அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மருத்துவ காரணங்களுக்காக ஜாமின் வழங்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது. கீழமை நீதிமன்றத்தில் வழக்கமான ஜாமின் மனுவை தாக்கல் செய்ய செந்தில் பாலாஜி தரப்புக்கு அறிவுறுத்தியுள்ளது. ஜாமின் வழங்க உச்சநீதிமன்றம் மறுத்ததால் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனுவை செந்தில் பாலாஜி தரப்பு திரும்ப பெற்று கொண்டது.

The post அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மருத்துவ காரணங்களுக்காக ஜாமின் வழங்க மறுப்பு: மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்..!! appeared first on Dinakaran.

Related Stories: