பீஜிங்: சீனாவில் சுவாச நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளதால், தனி வார்டுகளை ஏற்படுத்த சீன அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த 2019ம் ஆண்டின் பிற்பகுதியில் மத்திய சீன நகரமான வுஹானில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் தொற்றால், உலகமே பெரும் துன்பங்களுக்கு ஆளாகியது. கொரோனா பரவல் குறித்த சீனாவின் கருத்துகளை உலக நாடுகளும், உலக சுகாதார அமைப்பும் பல்வேறு சந்தேகங்களை இன்றும் எழுப்பி வருகின்றன.
இந்நிலையில் சீனாவில் கடுமையான சுவாச நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்து வருகிறது. குறிப்பாக குழந்தைகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் இது தொற்று நோய் பரவல் இல்லை என்று உலக சுகாதார அமைச்சகத்திடம் சீனா கூறியுள்ளது. இதுகுறித்து சீனாவின் தேசிய சுகாதார ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் மி ஃபெங் கூறுகையில், ‘கொரோனா கட்டுபாடுகளை முழுமையாக தளர்த்தியதால், தற்போதைய குளிர்காலத்தில் சுவாச பாதிப்புகள் அதிகரித்துள்ளன.
கடுமையான சுவாச நோய் பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், பல வகையான நோய்க்கிருமிகள் ஒரே நேரத்தில் பரவி வருகிறது. அதனால் சுவாச நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு என்று தனியாக கிளினிக்குகள் மற்றும் சிகிச்சை வார்டுகளை அதிகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பள்ளிகள், குழந்தைகள் பராமரிப்பு மையங்கள், முதியோர் இல்லங்களை கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பீஜிங், லியோனிங் மாகாணங்களில் சுவாச நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது’ என்றார்.
The post கொரோனாவுக்கு பின் தற்போது புது நோய்க்கிருமி: சுவாச நோயால் சீனர்கள் கடும் பாதிப்பு.! மருத்துவமனைகளுக்கு குழந்தைகளுடன் படையெடுக்கும் மக்கள் appeared first on Dinakaran.
