ரிங்கு சிங் பேட்டிங் தோனி போல் உள்ளது: கேப்டன் சூர்யகுமார் பாராட்டு

திருவனந்தபுரம்: இந்தியா -ஆஸ்திரேலியா இடையே 5 போட்டிகள் கொண்ட டி.20 தொடரில் முதல் போட்டியில் இந்தியா வெற்றிபெற்ற நிலையில் 2வது போட்டி திருவனந்தபுரத்தில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வு செய்ய முதலில் பேட் செய்த இந்தியா 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 235 ரன் குவித்தது. அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 25 பந்தில், 9 பவுண்டரி,2 சிக்சருடன்53, கெய்க்வாட் 58(43பந்து), இஷான்கிஷன் 52(32பந்து, 3பவுண்டரி,4சிக்சர்), ரிங்குசிங் நாட்அவுட்டாக 9 பந்தில் 31ரன் (4பவுண்டரி,2சிக்சர்) விளாசினர். பின்னர் களம் இறங்கிய ஆஸ்திரேலியா 20 ஓவரில் 9 விக்கெட்இழப்பிற்கு 191 ரன்களே எடுத்தது. இதனால் 44 ரன் வித்தியாசத்தில் இந்தியா வெற்றிபெற்றது. ஆஸி. பேட்டிங்கில் மார்கஸ் ஸ்டோனிஸ் 45, கேப்டன் மேத்யூவேட் நாட் அவுட்டாக 42, டிம் டேவிட் 42 ரன் எடுத்தனர்.

இந்திய பவுலிங்கில் பிரசித் கிருஷ்ணா,ரவி பிஷ்னோய் தலா 3 விக்கெட் வீழ்த்தினர். ஜெய்ஸ்வால் ஆட்டநாயகன் விருது பெற்றார். வெற்றிக்கு பின் கேப்டன் சூர்யகுமார் கூறியதாவது: இந்த போட்டியில் டாப் ஆர்டர் வீரர்கள் எந்த ஒரு அழுத்தத்தையும் எனக்கு தரவில்லை. அவர்களே ஆரம்பத்திலிருந்து ரன்களை மிக வேகமாக குவித்துவிட்டனர். நான் இந்த போட்டிக்கு முன் வீரர்களிடம் ஒரு சில விஷயங்களை மட்டும்தான் கூறினேன். குறிப்பாக முதலில் பேட்டிங் செய்ய வேண்டியதாக இருந்தாலும் தயாராகிக் கொள்ளுங்கள் என்று கூறினேன். 2வதுபேட்டிங்கில் பனி அதிகமாக இருந்தது. இருந்தாலும் நாங்கள் பெரிய அளவில் ரன்களை குவித்திருந்ததால் அவர்களை கட்டுப்படுத்த முடிந்தது. ரிங்கு சிங் கடந்த போட்டியில் பேட்டிங் ஆடியதை பார்த்தேன். அவர் காட்டிய நிதானம் அற்புதமாக இருந்தது. அது எனக்கு ஒரு தலைசிறந்த வீரரை நினைவூட்டியது.” எனக் கூறி சிரித்தார். அப்போது அவரிடம், அது யார் என சொல்ல முடியுமா? என கேள்வி கேட்கப்பட்டது. அப்போது ”அது யார் என்று அனைவருக்கும் தெரியும்” என்று மட்டும் கூறினார்.

தோல்வி குறித்து ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் ஆண்ட்ரே போரோவெக் கூறியதாவது: பவர்பிளேவில்அதிக ரன்களை விட்டுக்கொடுத்து விட்டோம். எங்களால் மைதானத்தின் தன்மையை கணிக்க முடியாமல் போனது. எங்கள் செயல்பாடு தவறாக இருந்ததால் இந்தியா ஆதிக்கம் செலுத்தி வெற்றிபெற்றுவிட்டது, என்றார். இதனிடையே பரிசளிப்பு விழாவிற்கு கேப்டன் மேத்யூவேட் வராதது ஏன் என்ற கேள்வி எழுந்தது. பேட்டிங்கின் போது உடம்பில் பல இடங்களில் அவர் அடி வாங்கினார். அதில் ஏற்பட்ட காயம் காரணமாகவே அவர் பரிசளிப்பு விழாவில் கலந்து கொள்ளவில்லை, நாளை மறுதினம் மூன்றாவது போட்டி நடைபெற இருப்பதால் விரைவாக முதலுதவி பெறவே ஓய்வறைக்கு சென்றதால் அவரால் பரிசளிப்பு விழாவில் பங்கேற்க முடியவில்லை என தகவல் வெளியாகி உளளது. இந்த வெற்றி மூலம் இந்தியா 2-0 என முன்னிலை வகிக்கும் நிலையில்3வது போட்டி நாளை கவுகாத்தியில் நடைபெற உள்ளது.

The post ரிங்கு சிங் பேட்டிங் தோனி போல் உள்ளது: கேப்டன் சூர்யகுமார் பாராட்டு appeared first on Dinakaran.

Related Stories: