தீபாவளி விடுமுறை முடிந்து திருப்பூர் திரும்பும் வடமாநில தொழிலாளர்கள்

 

திருப்பூர், நவ. 26: தீபாவளி பண்டிகை விடுமுறை முடிந்து திருப்பூருக்கு வடமாநில தொழிலாளர்கள் திரும்பி வரும் நிலையில், ரயில் நிலையத்தில் கூட்டம் அலைமோதியது. திருப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பின்னலாடை நிறுவனங்கள் மற்றும் அதனை சார்ந்த ஜாப் ஒர்க் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிறுவனங்களில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். தொழிலாளர்களுக்கு உணவு, தங்குமிடம், வாகன வசதி போன்றவை நிறுவனங்கள் சார்பில் செய்து கொடுக்கப்படுகின்றன.

தற்போது வரை திருப்பூர் மாநகராட்சி பகுதியில் 9 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இருந்து வருகின்றனர். இதில், வடமாநில தொழிலாளர்கள் 2 லட்சத்திற்கும் அதிகமாக உள்ளனர். தமிழகத்தின் பிற மாவட்டங்களை சேர்ந்த தொழிலாளர்கள் பண்டிகை காலங்கள் மற்றும் விசேஷங்களுக்கு சொந்த ஊர்களுக்கு சென்று விடுவார்கள். ஆனால், வடமாநில தொழிலாளர்கள் தீபாவளி பண்டிகையின் போது மட்டுமே சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். தீபாவளி பண்டிகைக்கு செல்கிறவர்கள் குறைந்தபட்சம் 10 முதல் 14 நாட்கள் வரை விடுமுறை எடுப்பார்கள்.

இந்த ஆண்டுக்கான தீபாவளி பண்டிகை கடந்த 12ம் தேதி கொண்டாடப்பட்டது. இதன் காரணமாக வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு சென்றனர்.  தற்போது விடுமுறை முடிந்து திருப்பூருக்கு திரும்புவதால் பாட்னா, தன்பாத் ஆகிய ரயில்களில் பீகார், ஒடிசா, மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம் மற்றும் ஜார்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து தொழிலாளர்கள் திருப்பூருக்கு வந்துகொண்டிருக்கின்றனர். இதனால், ரயில் நிலையத்தில் கூட்டம் அலைமோதி வருகிறது.

The post தீபாவளி விடுமுறை முடிந்து திருப்பூர் திரும்பும் வடமாநில தொழிலாளர்கள் appeared first on Dinakaran.

Related Stories: