33 ரன் வித்தியாசத்தில் கோவாவை வீழ்த்தியது தமிழ்நாடு

தானே: விஜய் ஹசாரே டிராபி ஒருநாள் போட்டித் தொடரின் லீக் ஆட்டத்தில், கோவா அணியுடன் மோதிய தமிழ்நாடு 33 ரன் வித்தியாசத்தில் வென்றது. தாதோஜி ஸ்டேடியத்தில் (மகாராஷ்டிரா) நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற கோவா முதலில் பந்துவீசியது. சாய் சுதர்சன், என்.ஜெகதீசன் இணைந்து தமிழக இன்னிங்சை தொடங்கினர். ஜெகதீசன் 2, சாய் கிஷோர் 3 ரன்னில் வெளியேற, தமிழ்நாடு 16 ரன்னுக்கு 2 விக்கெட் இழந்து தடுமாறியது. இந்த நிலையில், சாய் சுதர்சன் – பாபா அபராஜித் ஜோடி பொறுப்புடன் விளையாடி 3வது விக்கெட்டுக்கு 90 ரன் சேர்த்தது.

அபராஜித் 40 ரன் எடுத்து அர்ஜுன் டெண்டுல்கர் வேகத்தில் எல்பிடபுள்யு ஆனார். விஜய் ஷங்கர் 24 ரன்னில் விக்கெட்டை பறிகொடுக்க, மறு முனையில் அமர்க்களமாக விளையாடிய சாய் சுதர்சன் சதம் விளாசி அசத்தினார். அவர் 125 ரன் (144 பந்து, 10 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி அர்ஜுன் பந்துவீச்சில் கிளீன் போல்டானார். இந்திரஜித் 24 ரன் எடுத்து ரன் அவுட்டாக, ஷாருக் கான் 9, வருண் சக்ரவர்த்தி 4 ரன்னில் பெவிலியன் திரும்பினர். தமிழ்நாடு 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 296 ரன் குவித்தது. கேப்டன் தினேஷ் கார்த்திக் 47 ரன் (31 பந்து, 6 பவுண்டரி, 2 சிக்சர்), சந்தீப் வாரியர் (0) ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

கோவா பந்துவீச்சில் அர்ஜுன் டெண்டுல்கர் 3, தர்ஷன் மிசல், கர்க், மோகித் ரெட்கர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 297 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய கோவா 50 ஓவரில் 263 ரன் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. கிருஷ்ணமூர்த்தி சித்தார்த் அதிகபட்சமாக 61 ரன், ஸ்நேஹல் கவுதங்கர் 55, கேப்டன் மிசல் 36, ராகுல் திரிபாதி 26 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் கணிசமாக ரன் குவிக்கத் தவறினர்.

தமிழ்நாடு பந்துவீச்சில் சந்தீப் வாரியர் 4, சாய் கிஷோர், அபராஜித் தலா 2, நடராஜன், சாய் சுதர்சன் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். 33 ரன் வித்தியாசத்தில் வென்ற தமிழ்நாடு 4 புள்ளிகளை தட்டிச் சென்றது. புதுச்சேரி தோல்வி: பெங்களூருவில் சவுராஷ்டிரா அணியுடன் நேற்று மோதிய புதுச்சேரி அணி 80 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. சவுராஷ்டிரா 48.5 ஓவரில் 222 ரன் ஆல் அவுட் (ஹர்விக் தேசாய் 81, தர்மேந்திரசிங் 56, சிராக் ஜனி 38). புதுச்சேரி 49 ஓவரில் 142 ரன் ஆல் அவுட் (அருண் கார்த்திக் 48, டோக்ரா 23, அரவிந்தராஜ் 22, கவுரவ் 21).

The post 33 ரன் வித்தியாசத்தில் கோவாவை வீழ்த்தியது தமிழ்நாடு appeared first on Dinakaran.

Related Stories: