ஆட்டோ டிரைவர் சாமர்த்தியத்தால் ₹2 கோடி ஹவாலா பணம் பறிமுதல் : பிடிபட்ட மூவரிடம் போலீசார் விசாரணை

சோழிங்கநல்லூர், நவ.25: மாதவரம் அருகே உரிய ஆவணமின்றி ஆட்டோவில் கொண்டு சென்ற ₹2 கோடியை போலீசார் பறிமுதல் செய்து, இதுதொடர்பாக 3 பேரிடம் விசாரித்து வருகின்றனர். பெரம்பூர் பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சுந்தரராஜ் (39), மாதவரம் ஆந்திரா பேருந்து நிலையம் பகுதியில் ஆட்டோ ஓட்டி வருகிறார். நேற்று அதிகாலை 4.30 மணிக்கு, இந்த பேருந்து நிலையத்திற்கு வந்த 3 வாலிபர்கள், சவுகார்பேட்டை செல்லவேண்டும் என கூறி, ஆட்டோவில் ஏறியுள்ளனர். வழியில், அவர்கள் பேச்சில் சந்தேகம் ஏற்பட்டதால், வால்டாக்ஸ் சாலையில் ஆட்டோவை நிறுத்திய டிரைவர், கடைக்கு செல்வதாக அவர்களிடம் கூறிவிட்டு, அருகில் உள்ள யானைகவுனி காவல்நிலையத்துக்கு சென்று இதுபற்றி தெரிவித்தார். உடனே, போலீசார் ஆட்டோவில் இருந்த 3 பேரையும் சுற்றிவளைத்து, காவல்நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

இதில், ஆந்திர மாநிலம் நெல்லூர் பகுதியை சேர்ந்த யாசின் (24), தாவூத் (20), பைசூலா (28) என்பதும், நெல்லூர் பகுதியை சேர்ந்த நகைக்கடை உரிமையாளர் முகமத் என்பவர் நகை வாங்குவதற்காக சவுகார்பேட்டைக்கு தங்களை அனுப்பியதாக கூறினர். அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது அதில் ₹2.01 கோடி இருந்தது. ஆனால், பணத்துக்கான ஆவணங்கள் இல்லாததால் அதை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, இது ஹவாலா பணமா? என விசாரணை நடத்தி வருகின்றனர். உரிய ஆவணங்களின்றி பணத்தை கொண்டு வந்த 3 பேர் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்த ஆட்டோ டிரைவரை காவல் துறை உயர் அதிகாரிகள் பாராட்டினர்.

The post ஆட்டோ டிரைவர் சாமர்த்தியத்தால் ₹2 கோடி ஹவாலா பணம் பறிமுதல் : பிடிபட்ட மூவரிடம் போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: