சாயி தத்துவம்

நன்றி குங்குமம் ஆன்மீகம்

தொழுத கைகளை பொருளால் நிரப்பி, அழுத கண்களை அருளால் துடைத்திடும் கருணை வடிவாய், நினைப்பவர் மனதில் நினைக்கும் தெய்வமாக வந்து அருள்புரியும் சீரடி நாதனை. கண்டோபா கோயிலில் முதன் முதலாகப் பார்த்த, மஹல் ஸாபதி ‘யா ஸாயி’ (ஸாயி வர வேண்டும்) என்று அழைத்தவர். அதன்பின் சீரடி நாதனைக் காணும் அத்தனை பக்தர்களும் அப்பெயராலேயே அவரை அழைக்கத் தொடங்கினர். பின்னர் சாயி என்றும் அப்பெயரே சீரடி நாதனுக்கு நிலைத்து விட்டது. சீரடி சாயி தாம் வாழ்ந்த எளிமையான வாழ்க்கை மூலம் மானிடர்க்கு போதனைகளையும், தத்துவங்களையும் சொல்லாமல் சொல்லி, அதற்கேற்ப செயல்முறைகளை அமைத்தவர்.

‘சா அய்’ என்னும் தமிழ்ச் சொல்லுக்கு ‘உள்ளதன் நுணுக்கம்’ என்ற ஒரு பொருளும் உண்டு. நுணுக்கம் என்பது ‘கூர்மையாய் இருத்தல்’ (Sharpness) என்று வழங்கப்படும். ‘‘பொய்யாதின்றி புலமை நுணுக்கி’ என்பது சீவக சிந்தாமணித் தொடர். கூரிய மெய்யறிவினால் உளங்கொண்டு உணர்பவர்களுடைய கருத்தினால், நோக்குவதற்கு அரிய நோக்கமாகவும், கூரியதாய் உணர்தற்கும் அறிய நுண்ணிய உணர்வாக விளங்குபவன் இறைவன் என்பதை,‘கூர்த்த மெய்ஞ்ஞானத்தால் கொண்டுணர்வார் தங்கருத்தின் நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண்ணுணர்வே’ என்று சிவபுராணம் கூறும்.

ஸ்ரீசங்கரர் ஸ்ரீரங்கநாதப் பெருமானை,
‘‘ஸசித்ரசாயீ ஜகதேசாயீ நந்தாங்கசாயீ கமலாங்கசாயீ I
அம்போதிசாயீ வடபத்சாயீ ஸ்ரீரங்கசாயீ ரமதாம் மணேமே II’’

– என்று போற்றும் ஸ்லோகத்தில் ‘சாயீ, சொல்லாட்சி கிடைக்கிறது.

‘சாய் பெறு சிறுதளிர்’- ‘துணுகுதலைப் பெற்ற மென்மையான தளிர்’ என்று திருநாவுக்கரசு தேவர் திருஏகாதசமாலை கூறும். திருஞானசம்பந்தர் திருச்சேய்ஞலூர் பதிகத்தின் பதிகப்பலன் கூறும் திருக்கடைக்காப்புப் பாடலில்,

‘‘சாயடைந்த ஞானம் மல்கும் சம்பந்தன் இன்னுரைகள்
வாயடைந்து பாடவில்லார் வானுலகு ஆள்பவரே’’

என்றருளிச் செய்வர்.

இங்கு ‘சாயடைந்த ஞானம் மல்கும் சம்பந்தன்’ என்றும் தொடர், ‘நுட்பமான ஞானம் மிக்க சம்பந்தன்’ என்று குறிப்பதை அறியலாம். (சாயடைந்த ஞானம்-நுணுக்கமான ஞானம்) ஆதிசேடனது நாகமணியின் ஒளிக்கு ‘சாய்ஒளி’ என்று பெயர். ஆகவே, திருச்சாய்க்காடு ‘சாயாவனம்’ எனவும் வழங்கப் பெறுகிறது என்று திருச்சாய்க்காடு தல வரலாறு கூறும்.

பழைய நாகரிகச் சிறப்பும், கடவுள், ஊழ், மறு பிறப்பு ஆகியவற்றில் நம்பிக்கை உடைய எகிப்தியர்கள், விதியை ‘ஷாய்’ (Shai) என்றும் பெயருடைய தெய்வமாக உருவகப்படுத்தி அதை வணங்கினர். ‘சாய்’ என்ற சொல் தீர்மானித்தல் அல்லது வரையறுத்தல் என்னும் பொருளுடைய ‘சா’ (Sau) என்ற மூலத்திலிருந்து உருவான சொல்லாகும். சாய்(Sai) என்பது ‘எவ்வாறு இருக்க வேண்டும்’ என்ற பொருளுடையது.

உலகப் பொருள்கள் எல்லாம் எவ்வாறு இருக்க வேண்டும் என்பது முடிவு செய்யப்பட்ட, விலக்க முடியாத, தவிர்க்க முடியாத விதியின்படி நடப்பதால் எகிப்தியர் இப்பொருளில் இச்சொல்லை வழங்கினர். எனவே, எகிப்தியர் கருத்துப்படி ‘சாய்’ (Sai) என்பது விதியின் கடவுளாக வணங்கப்படுகிறது. (The Egyptians had a very definite notion of fate or destiny, which was personified as the deity ‘Shai’. The word for destiny, ‘Sai later Sai (Shai) is derived from the verb ‘Sa’, ‘decide’, ;define’… Sai= what must be unavoidable fate. Encyclopaedia of Religion and Ethics, Vol.v.P.785) எனவே, ‘சாய்’ என்பதன் பொருள் துணுக்கம் (Sharpness) தெளிவாக வரையறுக்கப்பட்டது (Clear and well defined) என்பதாகும்.

‘‘சேதே விஸ்ரம்பதி இதி சாயி’’ – நமது ஹ்ருதயத்தில் அயனித்து பரமானந்தத்தைத் தரும் பரமாத்மவஸ்து எதுவோ அதுவே ‘சாயி’ என்று ஸ்ரீதை ஸ்ரீவல்லப சரிதாம்ருதம் கூறும்.
ச என்பது சஹஸ்ர பத்ம ஸாக்‌ஷாத்காரம்; ஆயி-தாய்; பாபா-தந்தை. நமக்குத் தாயாகவும் தந்தையாகவும் விளங்கி யோக சாதனைகளின் நிறைந்த பலனாக எப்பொருள் விளங்குகிறதோ அப்பொருளே ‘சாயிபாபா’ என்று சத்தியசாயி தனது தெய்வீக அருளுரையில் குறிப்பிடுகிறார் (Divine Discourse, Feb26,1961)நுணுக்கரிய நுண்ணுணர்வினால் அறியப்படாத இறைத்தன்மையே மானிடர் பொருட்டு, ‘சாயி’ என்னும் குரு வடிவாக சீரடியில் அவதரித்தது. ‘சாயி’ என்றால் வடமொழியில் ‘குரு’ (master) என்று பொருள்.

உலகத்து உயிர்கள் இறை நிலையை இரண்டு நிலையில் உணரும் தன்மையுடையன. ஒன்று, இயற்கை கடந்து தனித்து நிற்பது. மற்றொன்று இயற்கையுள்ளும் குருவின் மூலம் ஒளிர்வது. அறியாமை இருளை நீக்கி, ஆன்ம ஒளியை ஊட்டவும், உயிர்கள் தன்னையும் தன் தலைவனான இறைவனை அறிவதற்கும் குரு தேவை. குருவின் வழிகாட்டுதலில் தான் உயிர்கள் கடைத்தேறுதல் முறையாகும். குரு இல்லாத சமயம் கிடையாது.குரு என்றால் அறியாமையை நீக்குபவர் என்று பொருள். கு என்பது இருள்; ரு என்பது அதை நீக்கும் ஒளி.

குகார ஸ்சாந்த காரோ ஹி ருகாரஸ்தேஜ உச்யிதே I
அஜ்ஞானக் ராஸகம் பரஹ்ம குருரேவ ந ஸம்ஸய : II

அறியாமை என்றும் இருளை போக்கும் ஒளியே குரு என்று குரு கீதா சொல்லும். தமிழில் குரு என்றால் ‘கண்’ என்று பொருள். (செவி பழுது என்றால் செவிடு என்பது போல, கண் பழுது என்றால் குருடு என்பதாகும்). எனவே, நம் அகக்கண்ணைத் திறப்பவர்தான் குரு. நாய், புலி, முயல் இவற்றின் குட்டிகளை, ‘குருளை’ என்று தொல்காப்பியம் (நூற்பா.1507) கூறும். இவற்றின் குட்டிகள் பிறந்தவுடன் கண்களைத் திறப்பதில்லை. சில நாட்கள் கழித்துத்தான் கண் திறந்து பார்க்கும் திறத்தைப் பெறுகின்றன.

‘செக்கர் குருஉ மணிச் சுடிகை பொறிப்படச் சேடன்’ எனவரும் சிவஞான முனிவர் செங்கழுநீர் பிள்ளைத்தமிழ், ‘சிவந்த ஒளிவிடும் இரத்தினங்களைத் தலையின் உச்சியில் கொண்ட புள்ளிகளை உடைய படங்களைக் கொண்ட ஆதிசேசன்’ என்று கூறும். இங்கு, ‘குரு’ என்பது ‘ஒளி’யைக் குறிக்கும்.ஊனக் கண்களைத் திறந்தபடி பிறக்கும் நாம், நம் அகக் கண்ணைத் திறக்கும் குருவை நாடுவதில்லை. உயிர்களை இறைவனோடு இணைத்து வைக்கும் தகுதி வாய்ந்தவர் குரு. குரு சிவத்தையொத்தவர். இறைவனே உயிர்களுக்கு குருவாக அருள்புரிகின்றான் என்பதை, ‘‘அருபரத்து ஒருவன் அவனியில் வந்து குருபரனாகி’ என்று திருவாசகம் கூறும்.

‘‘குரு சரணாம்புஜ நிர்பர பக்த:
ஸம்ஸாராத் அசிராத் பவமுக்த:’’

– என்று வரும் பஜ கோவிந்தம் ஸ்லோகத்தில் ‘ஸத்குருவின் திருவடிகளில் பக்தி கொண்டுள்ள பக்தனுக்கு கோடி நன்மைகளில் மிகச் சிறந்ததான முக்தி உடனே கிடைத்து விடுகிறது’ என்று குருவருளின் திருவருளைப் பாடுகிறார் ஆதிசங்கரர். ‘குரு, கோவிந்தன் இருவரும் நிற்கின்றனர். யார் காலில் விழுவேன்? குருதான் போற்றத் தகுந்தவர். ஏனெனில் அவர்தானே கோவிந்தனைக் காட்டிக் கொடுத்தவர்’’ என்பது கபீர் வாக்கு.‘‘உள்ளத்திருந்தும் ஒளித்தான் பரன், அக்கள்ளந்தனைத் தவிர்த்துக் காட்டினான் குரவன்’’ என்பது ஆன்றோர் வாக்கு.

குரு பக்தியே எல்லாவித பக்தியைக் காட்டிலும் உயர்ந்தது. மேலானது, ஈடு இணையற்றது. அதற்கான செயல் முறைகளையும், பலன்களையும் திருமதி. கபர்டே, திரு.காகா சாஹேப் தீட்சித், திரு.மூலே சாஸ்திரி, திரு.பகத்பந்த், திருமதி. இராதாபாய் தேஷ்முக் மற்றும் திரு.ஜாவர் அலி இவர்களுக்குச் செய்த அறிவுரைகளாலும், அறவுரைகளாலும் பல்வேறு சூழ்நிலைகளில், பல்வேறு கால இடைவெளிகளில் ஸத்குரு பாபா எடுத்துரைத்தார் என்பது ‘ஸ்ரீசாயி சத் சரித்திரம்’ வாயிலாக நாம் அறிந்து கொள்கிறோம்.

‘‘உங்களது குருவினிடத்தில் நம்பிக்கையும், பற்று உறுதியும் கொள்ளுங்கள். குருவே தனி ஒருவரான நடத்துநர், இயக்குநர் என்று நம்புங்கள். தனது குருவின் பெருமையை அறிபவன் அவரை ‘ஹரிஹர பிரம்மம்’ என்றும், ‘திரிமூர்த்தி அவதாரம்’ என்றும் நம்புவன் ஆசிர்வதிக்கப்பட்டவன். வேறு சாஸ்திரங்களில் கை தேர்ந்த அறிவு எதுவும் தேவையில்லை’’ என்றார் பாபா. இன்றும் சற்குரு சீரடி நாதனை குருவாகவும், கடவுளாகவும், அவதார புருஷராகவும் போற்றும், துதிக்கும் அடியவர்கள் அனைவருக்கும் தரிசனம் தந்து. அற்புதம் நிகழ்த்தி, அவர்களை ஆன்மிக நன்னெறியில் செலுத்தி ஆட்கொள்கிறார் சாயிநாதன். இதை எழுதும் போது கூட, ஏன் இதை நீங்கள் இப்பொழுது படிக்கும் பொழுது கூட, பாபாவின் எண்ணற்ற, இணையற்ற லீலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

அத்தகைய சத்குரு சாயி நாதனனின் பெருமையை, ’உலகம் முழுவதையும் காகிதமாக்கி, மரங்களை எல்லாம் எழுது கோலாக்கி, ஏழு கடல்களையும் மையாக்கி எழுதினாலும் எழுத முடியாது’ என்பதே உண்மை.

‘‘என் நெஞ்சம் திறப்போர் நிற்காண்குவரே!
நின் யான் மறப்பின் மறக்கும் காலை
என் உயிர் யாக்கையிற் பிரியும் பொழுதும்
என் யான் மறப்பின் மறக்குவென்’’ (புறநா.175)

‘‘என் நெஞ்சத்தைத் திறந்து பார்ப்பவர்கள் அதில் நின்னையே காண்பார்கள். உன்னை நான் மறந்தால் அப்போது என் உடம்பிலிருந்து உயிர் பிரிந்து விடும். உயிர் பிரியும் போதும் என்னை மறப்பனே ஒழிய உன்னை மறக்க மாட்டேன்’ என்று புறநானூற்றில் பாடிய கள்ளில் ஆத்திரையனாரின் மேலான மனநிலையை சீரடி சாயிநாதன் நமக்கு வழங்குவாராக.

முனைவர் அ.வே. சாந்திகுமார சுவாமிகள்

The post சாயி தத்துவம் appeared first on Dinakaran.

Related Stories: