திருவண்ணாமலையில் களைகட்டும் கார்த்திகை தீபத் திருவிழா: தேரோட்டத்தை காண அலைமோதும் பக்தர்கள் கூட்டம்..!!

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் கொட்டும் மழையிலும் கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி தேரோட்டம் நடைபெற்றது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 17ம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. 6-ம் நாள் உற்சவத்தை முன்னிட்டு நேற்று காலை வெள்ளி யானையில் சந்திரசேகரர் வீதி உலாவும், இரவு பஞ்ச மூர்த்திகள் வெள்ளி தேர் மற்றும் வெள்ளி இந்திர விமானங்களில் மாட வீதிகளில் சாமி வீதி உலா நடந்தது.

இந்நிலையில் இன்று கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான இன்று 7-ம் நாள் உற்சவமாக தேர் திருவிழா நடைபெற்றது. பஞ்ச மூர்த்திகள் திருத்தேர்களில் எழுந்தருளி மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் புரிந்தார். பின்னர் இந்த திருநாளில் விநாயகர், வள்ளி, தெய்வானை, முருகப்பெருமான், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் என பஞ்சமூர்த்திகளுக்கும் திருக்கோயிலில் சிறப்பு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டு மாடவீதியில் வலம் வந்தனர். முதலில் இன்று காலை விநாயகர் தேர் மாட வீதிகளில் வலம் வந்தது.

அதன்பின் வள்ளி, தெய்வானை சமேத முருகப்பெருமான் தேர் மாட வீதிகளில் வலம் வரும். இன்று நண்பகலில் பெரிய தேர் என்று அழைக்கப்படும் உண்ணாமலை அம்மன் சமேத அண்ணாமலையார் தேரோட்டம் நடைபெறும். தேர் மாடவீதிகளில் வருவதைக் காண்பதற்கு லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். பெரிய தேர் நிலைக்கு வந்த பின்னர் பெண்கள் மட்டுமே வடம் பிடித்து இழுக்கும் அம்மன் தேரும், சிறுவர்கள் மட்டும் வடம் பிடித்து இழுக்கக்கூடிய சண்டிகேஸ்வரர் தேரும் இன்று இரவு மாட வீதிகளில் வலம் வரும். நேற்றும், இன்றும் திருவண்ணாமலையில் தேரோட்டம் நடைபெறுவதால் தேரோட்டத்தை காண பக்தர்கள் குவிந்து வருகின்றனர். பக்தர்களின் பாதுகாப்பிற்காக 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

The post திருவண்ணாமலையில் களைகட்டும் கார்த்திகை தீபத் திருவிழா: தேரோட்டத்தை காண அலைமோதும் பக்தர்கள் கூட்டம்..!! appeared first on Dinakaran.

Related Stories: