நில ஒருங்கிணைப்பு சட்டம் -2023 கைவிட கோரி தஞ்சாவூரில் விவசாயிகள் சங்க போராட்ட குழுவினர் ஆர்ப்பாட்டம்

 

தஞ்சாவூர், நவ.22:திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு மேல்மா சிப்காட் திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடிய விவசாயிகள் மீது போடப்பட்ட குண்டர் சட்டம் உள்பட அனைத்து வழக்குகளையும் ரத்து செய்து அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும். மேல்மா சிப்காட் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு சட்டம் -2023 கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகம் முன்பு தஞ்சாவூர் மாவட்ட அனைத்து விவசாயிகள் சங்க போராட்டக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதற்காக அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு மாவட்ட செயலாளர் மணி தலைமையில் மாநில தலைவர் பழனியப்பன், விவசாய சங்க நிர்வாகிகள் சுந்தர விமல்நாதன் உள்பட ஏராளமான விவசாயிகள் பேரணியாக கலெக்டர் அலுவலகம் நோக்கி வந்தனர். பின்னர் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.தமிழக அரசு உடனடியாக கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் வரும் 29ம் தேதி சென்னையில் அனைத்து உழவர்களும் ஒன்று திரண்டு மாபெரும் முற்றுகை போராட்டம் நடத்துவோம் என அறிவிப்பு விடுக்கப்பட்டது. ஆர்ப்பாட்டத்தையொட்டி கலெக்டர் அலுவலகம் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

The post நில ஒருங்கிணைப்பு சட்டம் -2023 கைவிட கோரி தஞ்சாவூரில் விவசாயிகள் சங்க போராட்ட குழுவினர் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: