தங்க முலாம் பூசப்பட்ட செம்பு நகைகள் கொடுத்து ₹4.35 லட்சம் துணிகர மோசடி கடை உரிமையாளர் போலீசில் புகார் குடியாத்தம் அருகே

குடியாத்தம், நவ.22: குடியாத்தம் அருகே தங்க முலாம் பூசப்பட்ட செம்பு நகைகளை கொடுத்து ₹4.35 லட்சம் மோசடி செய்த 2 பேர் மீது கடை உரிமையாளர் போலீசில் புகார் அளித்தார். வேலூர் மாவட்டம், குடியாத்தம் நடுபேட்டை பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். இவர் தென்குளக்கரை பகுதியில் நகை விற்பனை மற்றும் அடகு வியாபாரம் செய்து வருகிறார். இவர் நேற்று தன்னிடம் அடகு வைத்த நகைகளை சோதனை செய்தார். அப்போது, கடந்தாண்டு கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த சிவா என்ற பெயரில் வாலிபர் ஒருவர் 9 சவரன் செயினை அடகு வைத்து ₹2.35 லட்சம் பெற்று சென்றார். அந்த நகை முலாம் பூசப்பட்ட செம்பு என்று தெரியவந்தது. இதுதொடர்பாக சிவாவிற்கு தொடர்பு கொண்டபோது அவர் கொடுத்த தொலைபேசி எண் தவறானது என்பது தெரியவந்தது.

இதேபோல், கடந்த மாதம் ஒரு பெண் 5 சவரனை விற்று அதற்கு பதிலாக ₹2 லட்சம் மதிப்பிலான புதிய செயினை வாங்கி சென்றுள்ளார். அந்த செயினும் தங்க முலாம் பூசப்பட்ட செம்பு என்பது தெரிந்தது. இதனால், ரமேஷூக்கு மொத்தம் ₹4.35 லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், அதிர்ச்சி அடைந்த ரமேஷ் குடியாத்தம் டவுன் போலீசில் நேற்று புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் ரமேஷின் கடையில் பதிவான சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post தங்க முலாம் பூசப்பட்ட செம்பு நகைகள் கொடுத்து ₹4.35 லட்சம் துணிகர மோசடி கடை உரிமையாளர் போலீசில் புகார் குடியாத்தம் அருகே appeared first on Dinakaran.

Related Stories: