கார்த்திகை மாத பிரதோஷம், பவுர்ணமியை முன்னிட்டு சதுரகிரிக்கு செல்ல 4 நாள் அனுமதி

வத்திராயிருப்பு: கார்த்திகை மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு, சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு வரும் 24ம் தேதி முதல் 27ம் தேதி வரை 4 நாட்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே, மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் உள்ளது. கடல் மட்டத்திலிருந்து சுமார் 4,500 அடி உயரத்தில் இக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் மாதந்தோறும் பவுர்ணமி, அமாவாசைக்கு தலா 3 நாட்கள், பிரதோஷத்திற்கு 2 நாட்கள் என 8 நாட்கள் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.

இந்நிலையில், கார்த்திகை மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு வரும் நவ.24ம் தேதி முதல் 27ம் தேதி வரை 4 நாட்கள் பக்தர்கள் கோயிலுக்குச் செல்ல கோயில் நிர்வாகம் மற்றும் வனத்துறை அனுமதி வழங்கி உள்ளது. பிரதோஷம் மற்றும் பவுர்ணமி தினத்தன்று சுந்தரமகாலிங்கம் சுவாகிக்கு பன்னீர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் அபிஷேகம் செய்யப்படும். இதற்கான ஏற்பாடுகள் கோயில் நிர்வாகம் சார்பில் செய்யப்படும். அனுமதி வழங்கியுள்ள நாட்களில் மழை பெய்தால் பக்தர்கள் கோவிலுக்கு செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள் என கோயில் நிர்வாகம் மற்றும் வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அரசால் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் உள்ளிட்ட பொருட்களை கொண்டு வருவதற்கு அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post கார்த்திகை மாத பிரதோஷம், பவுர்ணமியை முன்னிட்டு சதுரகிரிக்கு செல்ல 4 நாள் அனுமதி appeared first on Dinakaran.

Related Stories: