ரூ.6.50 கோடிக்கு 377 பேர் புகார் எதிரொலி; பல கோடி நகைகள், பணத்துடன் நகை கடை உரிமையாளர் ஓட்டம்

சேலம்: சேலத்தில் பல கோடி நகைகள், பணத்துடன் ஓட்டம் பிடித்த நகைக்கடை உரிமையாளர் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் 377 பேர் ₹6.50 கோடிக்கு மோசடி புகார் கொடுத்துள்ளனர். சேலம் அருகேயுள்ள சுக்கம்பட்டி மேட்டுத்தெருவை சேர்ந்தவர் சபரிசங்கர் (40). இவர் எஸ்விஎஸ் என்ற பெயரில் சேலம் அம்மாபேட்டை, சீலநாயக்கன்பட்டி, ஆத்தூர், அரூர், தர்மபுரி மற்றும் நாமக்கல் உள்பட 11 இடங்களில் நகைக்கடை தொடங்கினார். இந்த நகைக்கடைகளில் பழைய நகைகளை வாங்குவது, நகைச்சீட்டு மூலம் செய்கூலி, சேதாரம் இன்றி நகை பெறலாம் என்பது உள்ளிட்ட கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்தார். இதனை நம்பிய ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பணத்தை செலுத்தி நகைச்சீட்டு போட்டு வந்திருந்தனர்.

இந்தநிலையில் சில நாட்களுக்கு முன் 11 நகைக்கடைகளையும் பூட்டிவிட்டு, பல கோடி மதிப்புள்ள நகைகள், பணத்துடன் உரிமையாளர் சபரிசங்கர், மேலாளர்கள் ஆகியோர் தலைமறைவாகிவிட்டனர். இதனால், கோடி கணக்கில் பணம் செலுத்தி ஏமாந்த பொதுமக்கள், சேலம் மாநகர மத்திய குற்றப்பிரிவு, மாவட்ட குற்றப்பிரிவு காவல்நிலையங்களில் புகார் கொடுத்துள்ளனர். சேலம் மாவட்ட எஸ்பி அருண்கபிலனிடம் ஓமலூரை சேர்ந்த குமார் என்பவர் கொடுத்த புகாரின் பேரில், ‘’மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி இளமுருகன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். அதில் நகைக்கடை உரிமையாளர் சபரிசங்கர், மேலாளர் முருகன், ஏஜெண்ட் பிரகாஷ் ஆகிய 3 பேர் மீது ₹17.35 லட்சம் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து 3 பேரையும் குற்றப்பிரிவு போலீசார் தேடி வருகின்றனர்.

இந்தநிலையில் சேலம் மாவட்ட எஸ்பி அலுவலகத்திற்கு ஆத்தூர், தலைவாசல், ஓமலூர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திரண்டு வந்து நகைக்கடை உரிமையாளர் சபரிசங்கர் மீது புகார்களை கொடுத்த வண்ணமாக உள்ளனர். இதுவரையில் 377 பேர் புகார் மனு கொடுத்துள்ளனர். அதனை கணக்கிடும்போது ₹6.50 கோடி மோசடி செய்திருப்பதை போலீசார் உறுதி செய்துள்ளனர். இன்னும் தொடர்ந்து புகார்களை பாதிக்கப்பட்ட பொதுமக்கள் கொடுத்து வருகின்றனர்.

ரூ.3 கோடிக்கு மேல் மோசடி சம்பவம் நடந்தால், பொருளாதார குற்றப்பிரிவு போலீசார்தான் விசாரிப்பார்கள். அதனால், இவ்வழக்கில் இதுவரை வந்த புகாரின்படி, மோசடி தொகை ₹6.50 கோடியை கடந்து விட்டது. ஆகையால், இம்மோசடி வழக்கை சேலம் பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்ற மாவட்ட எஸ்பி அருண்கபிலன் முடிவு செய்துள்ளார். அதற்கான பணியில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் ஈடுபட்டு உள்ளனர். அதேபோல், சேலம் மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீசுக்கு இதுவரை வந்த புகார்களும் ₹3 கோடிக்கு மேல் வந்துவிட்டது. அதனால் மத்திய குற்றப்பிரிவு போலீசாரும், இவ்வழக்கை சேலம் பொருளாதாரகுற்றப்பிரிவுக்கு மாற்ற முடிவு செய்துள்ளனர்.

The post ரூ.6.50 கோடிக்கு 377 பேர் புகார் எதிரொலி; பல கோடி நகைகள், பணத்துடன் நகை கடை உரிமையாளர் ஓட்டம் appeared first on Dinakaran.

Related Stories: