சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலில் கார்த்திகை தீபதிருவிழா கொடியேற்றம்

 

கும்பகோணம், நவ.19: கும்பகோணம் அருகே உள்ள முருகனின் அறுபடை வீடுகளில் நான்காம் படைவீடான சுவாமிமலையில் திருக்கார்த்திகை தீபத்திருவிழாவினயொட்டி நேற்று கொடியேற்றம் சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். தமிழ் கடவுள் என போற்றப்படும் முருகனின் அறுபடை வீடுகளில் நான்காம் படைவீடாக அமையப்பெற்றது கும்பகோணம் அருகேயுள்ள சுவாமிமலை அருள்மிகு சுவாமிநாத சுவாமி திருக்கோயில். இது பிரபவ முதல் அட்சய முடியவுள்ள 60 தமிழ் வருட தேவதைகள் 60 படிக்கட்டுகளாக அமையப்பெற்ற கட்டுமலைக்கோயிலாகும்.

தந்தை சிவபெருமானுக்கு ஓம் எனும் பிரணவ மந்திர பொருளை குருவாக இருந்து உபதேசித்த பெருமை பெற்றது இத்தலம். எனவே, இத்தலத்தில் முருகப்பெருமான் சிவகுருநாதன் என்றும், சுவாமிநாதன் என்றும் போற்றப்படுகிறார். நக்கீரரால் திருமுருகாற்றுப்படையிலும், அருணகிரிநாதரால் திருப்புகழிலும் பாடல்பெற்ற தலமும், அருணகிரிநாதருக்கு முருகப்பெருமான் பாத தரிசனம் அருளிய சிறப்புடைய தலம் என்ற பெயரும் பெற்றது இந்த சுவாமிமலை திருத்தலம். இத்தகைய சிறப்புபெற்ற நான்காம் படைவீடான சுவாமிமலையில் ஒவ்வொரு ஆண்டும் திருக்கார்த்திகை திருவிழா 11 நாட்களுக்கு சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

அதுபோல, இவ்வாண்டும் இவ்விழா நேற்று வள்ளி, தெய்வானை சமேத சண்முகசுவாமி சிறப்பு மலர் அலங்காரத்தில் விநாயகர் மற்றும் சண்டிகேஸ்வரருடன் தங்க கொடிமரம் அருகே எழுந்தருள, கொடிமரத்திற்கு அபிஷேக ஆராதனைகள் செய்து வேலுடன் கூடிய யானை சின்னம் பொறிக்கப்பட்ட திருக்கொடி ஏற்றப்பட்டு மகா தீபாராதனை செய்யப்பட்டது. தொடர்ந்து சுவாமிகளுக்கும் கோபுர ஆர்த்தி செய்யப்பட்டது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

இதனைத்தொடர்ந்து நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் சுவாமி திருவீதி உலா நடைபெறுகிறது. தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 9ம் நாளான திருக்கார்த்திகை தினமான வரும் 26ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு மேல் திருத்தேரோட்டமும், இரவு தங்கமயில் வாகனத்தில் சுவாமி திருவீதி உலா நடைபெற்று தீபக்காட்சியும் நடைபெற உள்ளது.

The post சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலில் கார்த்திகை தீபதிருவிழா கொடியேற்றம் appeared first on Dinakaran.

Related Stories: