திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்: கடும் குளிரிலும் திரளான பக்தர்கள் தரிசனம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. இதில், கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பஞ்ச பூத தலங்களில் அக்னி தலமாகவும், நினைக்க முத்தித்தரும் திருத்தலமாகவும் அமைந்திருக்கிறது திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில். இங்கு நடைபெறும் கார்த்திகை தீபத்திருவிழா உலக பிரசித்தி பெற்றதாகும். பிரம்மாவுக்கும், திருமாலுக்கும் அடிமுடி காணாத ஜோதிப்பிழம்பாக சிவபெருமான் எழுந்தருளியதை கொண்டாடும் வகையில் கார்த்திகை மாதம் கிருத்திகை தினத்தன்று மலை மீது மகாதீபம் ஏற்றப்படுகிறது.

இந்நிலையில், அண்ணாமலையார் கோயிலில் இந்தாண்டு கார்த்திகை தீபத்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. இதையொட்டி, அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு சுவாமிக்கும், அம்மனுக்கும் சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடுகள் நடந்தன. பஞ்சமூர்த்திகளான விநாயகர், சுப்பிரமணியர், உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகியோர் அலங்கார ரூபத்தில் கொடிமரத்தின் முன்பு எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

அதிகாலை 5.45 மணியளவில் அண்ணாமலையார் கோயில் 3ம் பிரகாரத்தில் சுவாமி சன்னதி எதிரே உள்ள 63 அடி உயர தங்க கொடி மரத்தில் கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றப்பட்டது. அப்போது, அங்கு திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், ‘அண்ணாமலையாருக்கு அரோகரா, உண்ணாமுலையம்மனுக்கு அரோகரா’ என விண்ணதிர பக்தி முழக்கமிட்டனர். அதிகாலை 4 மணி முதல் கோயிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். 3ம் பிரகாரம் முழுவதும் பக்தர்கள் கூட்டத்தால் நிறைந்திருந்தது. விழாவில் துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, கலெக்டர் பா.முருகேஷ், எஸ்பி கார்த்திகேயன் மற்றும் கோயில் அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். கார்த்திகை தீபத்திருவிழா உற்சவம் தொடர்ந்து 10 நாட்கள் நடைபெற உள்ளது.

கார்த்திகை தீபத்திருவிழா உற்சவத்தின் முதல் நாளான நேற்று இரவு 9 மணியளவில் அளவில் ராஜகோபுரம் எதிரில் உள்ள 16 கால் மண்டபத்தில் இருந்து வான வேடிக்கையுடன் இரவு உற்சவ புறப்பாடு நடந்தது. அப்போது, அலங்கார ரூபத்தில் எழுந்தருளிய பஞ்சமூர்த்திகளை தரிசித்த பக்தர்கள், அண்ணாமலையாருக்கு அரோகரா என பக்தி முழக்கமிட்டனர். பின்னர், வெள்ளி மூஷிக வாகனத்தில் விநாயகரும், வெள்ளி மயில் வாகனத்தில் சுப்பிரமணியரும், வெள்ளி அதிகார நந்தி வாகனத்தில் உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையாரும், ஹம்ச வாகனத்தில் பராசக்தி அம்மனும், சிம்ம வாகனத்தில் சண்டிகேஸ்வரரும் மாடவீதியில் பவனி வந்தனர்.

பஞ்சமூர்த்திகள் மாடவீதியில் பவனி வந்ததை தரிசிக்க கடும் குளிரையும், பனியையும் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நள்ளிரவு வரை திரண்டிருந்து தரிசனம் செய்தனர். தீபத்திருவிழா உற்சவத்தின் 2ம் நாளான இன்று காலை தங்க சூரியபிரபை வாகனங்களில் விநாயகர், சந்திரசேகரரும், இரவு வெள்ளி இந்திர விமானங்களில் பஞ்சமூர்த்திகளும் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார். விழாவின் முக்கிய நிகழ்வுகளான வெள்ளி தேரோட்டம் வருகிற 22ம்தேதியும், மகா தேரோட்டம் 23ம் தேதியும் நடைபெறும். விழாவின் நிறைவாக 26ம்தேதி அதிகாலை 4 மணிக்கு அண்ணாமலையார் கோயிலில் ஏகன் அநேகன் எனும் தத்துவத்தை உணர்த்தும் வகையில் பரணி தீபம் ஏற்றப்படும். அன்று மாலை 6 மணிக்கு 2,688 அடி உயர அண்ணாமலை மீது மகா தீபம் ஏற்றப்படும். மகாதீபம் ஏற்ற 4,500 கிலோ நெய், செப்பு கொப்பரை, ஆயிரம் மீட்டர் திரி ஆகியவை பயன்படுத்தப்பட உள்ளது.

The post திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்: கடும் குளிரிலும் திரளான பக்தர்கள் தரிசனம் appeared first on Dinakaran.

Related Stories: