செய்த வேலைக்கு கூலி கேட்ட சென்ட்ரிங் தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு

*பட்டாசு கடை உரிமையாளர் மீது புகார்

காட்டுமன்னார்கோவில் : காட்டுமன்னார்கோவில் அடுத்த கண்டமங்கலத்தை சேர்ந்தவர் பாலமுருகன்(40) சென்ட்ரிங் தொழிலாளியான இவர் கண்டமங்கலம் பகுதியில் இயங்கி வரும் தனியார் பட்டாசு கடைக்கு தீபாவளி விற்பனையை முன்னிட்டு தளம் அமைத்துத் தந்துள்ளார். இதற்கு அந்த பட்டாசு கடையின் உரிமையாளர் குமார் என்பவர் கூலி கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பாலமுருகன் சம்பந்தப்பட்ட கடைக்கு சென்று கூலியை கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பாலமுருகன் வீட்டுக்கு வந்துள்ளார். சிறிது நேரத்தில் கடையின் உரிமையாளர் குமார் மற்றும் அவரது மனைவி சரண்யா ஆகியோர் பாலமுருகனின் வீட்டிற்கு வந்து தங்களது கடையிலிருந்து பட்டாசுகளை பாலமுருகன் திருடி வந்துவிட்டார் என குற்றம் சாட்டி தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

இதையடுத்து காணாமல்போனதாக கூறப்பட்ட பட்டாசு அதே கடையில் இருந்து தெரியவந்ததை அடுத்து உரிமையாளர் குமார் பாலமுருகனிடம் மன்னிப்பு கூறியுள்ளார்.
இந்நிலையில் நேற்று அதிகாலை அதே பகுதியை சேர்ந்த பாலமுருகன்(26), ராஜேந்திரன்(60) மற்றும் முகம் தெரியாத இருவர் என 4 பேர் கொண்ட கும்பல் தொழிலாளி பாலமுருகன் வீட்டிற்கு வந்து அவரிடம் பேச வேண்டும் என கூறி அழைத்துச் சென்று கம்பி, உருட்டு கட்டையால் பலமாக தாக்கினர்.

மேலும் அரிவாளால் தலையில் வெட்டினர். பாலமுருகனின் அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். தொழிலாளி மீது தாக்குதல் நடத்திய கும்பல் குறித்து காட்டுமன்னார்கோவில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

The post செய்த வேலைக்கு கூலி கேட்ட சென்ட்ரிங் தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு appeared first on Dinakaran.

Related Stories: