பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்க எண்களின் அதிசயங்கள் (15,16,17)

நன்றி குங்குமம் ஆன்மிகம்

எண் 15-ன் சிறப்பு

பதினைந்து என்கிற எண் பிரதானமாக, 15 திதிகளைக் குறிக்கிறது. ஒரு மாதத்தை இரண்டாகப் பிரித்தால். ஒவ்வொரு 15 நாட்களும் ஒரு பருவம். (வளர்பிறை, தேய்பிறை) ஒவ்வொரு பருவமும் 15 நாட்கள். அவையே 15 திதிகள். 1. பிரதமை, 2. துவிதியை, 3. திருதியை, 4. சதுர்த்தி. 5. பஞ்சமி 6. சஷ்டி, 7. சப்தமி, 8. அஷ்டமி, 9. நவமி, 10. தசமி, 11. ஏகாதசி, 12. துவாதசி, 13. திரயோதசி, 14. சதுர்த்தசி, 15. பௌர்ணமி, (வளர்பிறை) அல்லது அமாவாசை (தேய்பிறை). மேல்நாட்டில் எண் 15 என்பது வளர்ச்சி மற்றும் விரிவாக்கத்தைக் குறிக்கிறது.

எண் 16-ன் சிறப்பு

நமது சமய மரபில் 16 என்பது அற்புதமான எண். ஒருவரை வாழ்த்தும் போது பதினாறு செல்வங்களும் பெற்று பெருவாழ்வு வாழ்க என்று வாழ்த்துகின்றோம் (பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க) அது என்ன 16 செல்வங்கள்? கல்வி, புகழ், வலிமை, வெற்றி, நன் மக்கள், பொன், நெல், நல் விதி, நுகர்ச்சி, அறிவு, அழகு, பெருமை, இளமை, துணிவு, நோயின்மை, வாழ்நாள்.

அபிராமி அந்தாதி பதிகப் பாடலொன்று இந்தப் பதினாறு செல்வங்கள் என்னென்ன என்பதை அழகாகக் கூறுகின்றது இப்படி:-அகிலமதில் நோயின்மை கல்விதன தானியம் அழகுபுகழ் பெருமை இளமை அறிவுசந் தானம்வலி துணிவுவாழ் நாள்வெற்றி ஆகுநல்லூழ் நுகர்ச்சி தொகைதரும் பதினாறு பேறும்தந் தருளிநீ சுகானந்த வாழ்வளிப்பாய் – (அபிராமி அந்தாதி பதிகம்).

கோயிலில் ஷோடச உபசாரங்கள் மிகவும் பழமையான ஆலயங்களில் விரிவாக, அழகாக நடத்தப்படுகிறது. அந்த பதினாறு வகை பூஜைகள் வருமாறு:-

1. ஆவாகனம்: இறைவனை வரவழைத்து விக்கிரகத்தில் எழுந்தருள செய்வதே ஆவாகனம் எனப்படும். ஜீவ சைதன்யத்தை மூலாதரத்தில் இருந்து மேலே ஏற்றுவதாக பாவித்து சங்கல்பம் செய்ய வேண்டும்.

2. ஸ்தாபனம்: இறைவனை விக்கிரகத்தில் எழுந்தருள வேண்டும் என்று பிரார்த்திப்பது ஸ்தாபனம் ஆகும்.

3. சன்னிதானம்: நாம் பூஜிக்கும் மூர்த்தி, நமக்கு அனுக்கிரகம் செய்வதற்காக நடத்தப்படும் பூஜைக்கு சன்னிதானம் என்று பெயர். இந்த பூஜையால் சிவத்தின் அருள் சுரந்து நம்மிடம் நிறைந்து நிற்கும்.

4. சன்னி ரோதனம்: இறைவா என்னிடம் என்றும் கருணையோடு இருக்க வேண்டும் என்று மனம் உருகி பிரார்த்தனை செய்வதற்கு சன்னிரோதனம் என்று பெயர்.

5. அவகுண்டனம்: கருவறை மூலவர் விக்கிரகத்தை சுற்றி கவச மந்திரத்தால் மூன்று கவசம் உண்டாக்க வேண்டும். மூலவர் பூஜைக்கு தடைகள் வராமல் மந்திரத்தால் அதனை மூட வேண்டும். இதற்காக ஆகம விதிப்படி சோடிகா முத்திரை, காளசண்டீ முத்திரை ஆகிய முத்திரைகளை பூஜை செய்பவர்கள் செய்தல் வேண்டும்.

6. அபிஷேகம்: எண்ணெய், மாப்பொடி, நெல்லி முள்ளி, மஞ்சள் பொடி, பஞ்ச கவ்யம், பஞ்சாமிர்தம், பால், தேன், தயிர், கரும்பு, வாழைப்பழம், எலுமிச்சம், பழச்சாறு, இளநீர், அன்னம், விபூதி, சந்தனம், பத்ரோதகம், கும்போதகம் ஆகியவற்றை வரிசைப்படி அபிஷேகம் செய்ய வேண்டும். அப்போது தேனு முத்திரை காட்டப் படுதல் வேண்டும். கை விரல்களால் பசுவின் மடி நான்கு காம்போடு இருப்பது போல காட்டுவது தேனு முத்திரையாகும். அப்போது இறைவன் இவ்விடத்தில் அமர்ந்து எங்கள் பூஜையை ஏற்க வேண்டும் என்று வேண்டிக் கொள்ள வேண்டும்.

7. பாத்யம்: சந்தனம், அருகு, வெண்கடுகு, விலாமிச்சை இந்த 4 பொருட்களையும் பாத்திய நீரில் கலந்து சுவாமி பாதத்தில் இட வேண்டும். ஆன்மாக்களாகிய நாம் சிவபதம் அடையவே இந்த பாத்யம் கொடுக்கப்படுகிறது. அப்போது, நம என்பதோடு கூடிய இருதய மந்திரம் சொல்ல வேண்டும்.

8. ஆசமனீயம்: ஏலக்காய், கிராம்பு, பச்சைக் கற்பூரம், நாவல்பழம், ஜாதிக்காய், குங்குமப்பூ ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு சுத்தமான தண்ணீர் ஊற்றி நிரப்பி இறைவன் பாதத்தில் வைக்க வேண்டும். அப்போது சம்கிதா மந்திரம் சொல்ல வேண்டும். ஆன்மாக்கள் பரமாத்மாவின் முகத்தில் சேர்த்தல் என்ற பாவத்தில் இந்த பூஜை செய்யப்படுதல் வேண்டும்.

9. அர்க்கியம்: எள், நெல், தர்ப்பை, நுனி, தண்ணீர், பால், அட்சதை, வெண்கடுகு, ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு சுத்தமான தண்ணீர் ஊற்றி அர்க்கியம் கொடுக்க வேண்டும் மூல மந்திரத்துடன் ஸ்வாகா என்ற மந்திரம் சேர்த்து சொல்ல வேண்டும். அபிஷேகம் ஆரம்பம் – முடிவு, நைவேத்தியம் ஆரம்பம் – முடிவு, தூபம் தீபம் ஆரம்பம் – முடிவு, பூஜைகள் ஆரம்பம் – முடிவு ஆகிய சமயங்களில் அர்க்கியம் கொடுக்க வேண்டும்.

10. புஷ்பதானம்: அழகான பூக்கள், மலர்களால் இறைவனை அலங்கரிக்க வேண்டும். மலர் அலங்காரத்தில் கடவுளை ரசித்துப் பார்க்க வேண்டும். செண்பகம், அருகு, புன்னாகம், நந்தியாவட்டை, பாதிரி, பிரகதி, அரளி, தும்பை ஆகிய 8 வகை பூக்களுடன் அட்சதை சேர்த்து மூல மந்திரத்துடன் வெளவுட் என்ற மந்திரம் உச்சரித்து மலர்களை சமர்ப்பிக்க வேண்டும். இது பேரின்ப வீட்டை அடைய செய்யும். சுவாமிக்கு பத்மாசனத்தில் ஆவாகனமும், ஆனந்த சயனத்தில் அபிஷேகமும், விமலா சனத்தில் அர்ச்சனையும், யோகாசனத்தில் நைவேத்தியமும், சிம்மாசனத்தில் வஸ்திர சமர்ப்பணமும் செய்ய வேண்டும்.

11. தூபம்: கருவறை மூலவருக்கு சாம்பிராணி புகை போட்டு வழிபடுவதே தூபம் எனப்படும். இது நமது அஞ்ஞானத்தை கிரியா சக்தியால் அகற்றலாம் என்ற தத்துவத்தை உணர்த்துகிறது. அகில், கீழாநெல்லி, சாம்பிராணி, குங்கிலியம் ஆகியவை சிறந்த தூபப்பொருட்களாகும்.

தூபம் போட்டு இறைவனை வழிபட்டால் பாபம் விலகும் என்பது ஐதீகமாகும். தூபம் காட்டும் போது, ஹிருதய மந்திரத்துடன் ஸ்வாகா என்பதை கடைசியில் கொண்டதாக உச்சரிக்க வேண்டும். மூலவருக்கு தூபம் காட்டும் போது, அவர் மூக்குக்கு நேராக காட்ட வேண்டும் என்பதை எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும்.

12. தீபம்: சோடச உபசாரங்களில் தீபம் காட்டுவது என்பது மிக, மிக முக்கியமானது. சுமாமிக்கு தீபம் காட்டப்படும் போது வழிபட்டால் நம்மிடம் உள்ள ஆணவம் நீங்கி, ஞானம் பெற முடியும். தீபம் ஏற்ற பசு நெய் பயன்படுத்துவது மிகவும் நல்லது. துணி, பஞ்சு இவைகளில் திரி செய்து தீபம் ஏற்றலாம். தீப வழிபாடு ஞான சக்தியை அதிகரிக்க செய்யும். மூலவருக்கு தீபம் காட்டும் போது கண்ணுக்கு நேரில் காட்ட வேண்டும். தீப முத்திரை காட்டிய பிறகு மணி அடித்து, மந்திரங்கள் சொல்லியபடி மூலவரின் கிரீடம் முதல் பாதம் வரை தீபம் காட்டப்படுதல் வேண்டும்.

13. நைவேத்தியம்: சுத்த அன்னம், பாயசம், பொங்கல் ஆகியவை சுவாமிக்கு நைவேத்தியமாக படைக்க ஏற்றவையாகும். மனிதர்களின் சராசரி குணமாகிய ஆசை, கோபம், மோகம் போன்றவைகளை நாம் அன்னமாக வேக வைத்து இறைவனுக்கு சமர்ப்பிப்பதையே இது காட்டுகிறது. இறைவனின் 5 முகங்களில் சத்யோஜாதம் முகத்துக்கு எள் அன்னம், வாமதேவத்துக்கு சர்க்கரை அன்னம், அகோரத்துக்கு பாயாசம், தத்புருஷத்துக்கு சுத்த அன்னம், ஈசானத்துக்கு பொங்கல் படைப்பது மிகவும் விசேஷமாகும்.

இது தவிர ஒவ்வொரு ஆலயத்திலும் இறைவனுக்கு பிடித்த நைவேத்தியம் மாறுபடும். காய்கறி உணவு வகைகள், பாயாசம், வடை, இனிப்புகள் படைப்பது பொதுவானதாக உள்ளது. இறைவனுக்கு நாம் நைவேத்தியம் படைப்பதால் உலகில் சுபீட்சம் ஏற்படும்.

14. பானீயம்: இறைவன் குடிக்க சுத்தமான தண்ணீர் கொடுக்க வேண்டும். அது பானீயம் எனப்படும். இதனால் நமது மனதில் உள்ள இவ்வுலக பற்று நீங்கி முக்தி கிடைக்கும் என்பது ஐதீகம்.

15. ஜப சமர்ப்பணம்: இறைவனின் மூல மந்திரத்தை 108 தடவை சொல்லி, அதை ஈஸ்வரனுக்கு சமர்ப்பணம் செய்வதே ஜப சமர்ப்பணம் என்றழைக்கப்படுகிறது. ஜபம், பூஜை ஹோமம் ஆகிய எல்லா புண்ணியச் செயல்களையும் இறைவனுக்கு சமர்ப்பிக்க வேண்டும். இறைவன் அதை ஏற்றுக் கொண்டு நமக்கு முக்தி தருவார். பூஜை முறைகளில் நம்மையும் அறியாமல் ஏற்படும் குற்றம், குறைகளை நிவர்த்தி செய்ய இந்த ஜப சமர்ப்பணம் உதவுகிறது. ருத்ராட்ச மணி கொண்டு மூல மந்திரம் சொல்லி சம்கிதா மந்திரத்தால் முறைப்படி கவசம் செய்து அர்க்கிய தண்ணீரை ஈசனின் வலக்கையில் சமர்ப்பித்து வழிபட வேண்டும்.

16.ஆரத்தி: மேள, தாளம் முழங்க, மணி அடித்து ஆரத்தி காட்டப்பட வேண்டும். ஆரத்திக்கான தீபத்தில் பூ போட்டு பார்த்தல், தண்ணீர் தெளித்தல், தட்டுதல், மந்திரம் சொல்லி சுற்றுதல் என்ற 4 வகைகளை செய்தல் வேண்டும். இறைவனுக்கு தீபம் காட்டும் போது முகம், கண், மூக்கு, கழுத்து, மார்பு, கால்கள் என வரிசையாக 3 தடவை சுற்றி காட்டுதல் வேண்டும். தீபத்தில் 16 வகை உள்ளது. பூமி, ஆகாயம், சொர்க்கம் ஆகிய மூன்றையும் காக்கவே மூன்று தடவை தீபாரதனை காட்டப்படுகிறது.

எண் 17-ன் சிறப்பு

ஜோதிடத்தில் பல வகை உண்டு.அதில் டாரட் அட்டை ஜோதிடம் ஒன்று. 1900களில் இருந்து, டாரட் கார்டுகள் கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் பற்றிய நுண்ணறிவோடு கணிக்கும் கலைக்கு உதவி செய்வன. டாரட் டெக் 78 அட்டைகளைக் கொண்டுள்ளது, ஒவ்வொன்றும் அதன் தனித்துவமான குறியீட்டு மற்றும் அர்த்தத்துடன் இருக்கும். அதில் ‘‘நட்சத்திரம்’’ என்பது டாரட் டெக்கில் 17வது அட்டை நம்பிக்கை, உத்வேகம் மற்றும் நுண்ணறிவைக் குறிக்கிறது.

இது பெரும்பாலும் அமைதி மற்றும் அமைதி உணர்வுடன் தொடர்புடையது. சில கலாச்சாரங்கள் சில எண்களுக்கு மந்திர சக்திகள் இருப்பதாகவும், நல்ல அல்லது கெட்ட அதிர்ஷ்டம் இருப்பதாகவும் நம்புகிறார்கள். நார்வேயில், 17 என்ற எண் அதிர்ஷ்டமாக கருதப்படுகிறது, ஏனெனில் 17 என்பது தீய ஆவிகளை விரட்டும் சக்தியைக் கொண்டிருப்பதாக நம்புகிறார்கள்.

இதன் விளைவாக, பல நார்வேஜியர்கள் தங்கள் அன்றாட வாழ்வில் 17 என்ற எண்ணை இணைத்துக் கொள்கின்றனர். லாட்டரி சீட்டு வாங்கும் போதும் அல்லது முக்கிய முடிவுகளை எடுக்கும்போதும் 17 ஐ அதிர்ஷ்ட எண்ணாக பயன்படுத்துகிறார்கள்.அதைவிட அதிசயம் ஒன்று உண்டு. அது நம் நாக்கு. பேச்சுக்கு நாக்கு முக்கியம். நாக்கு ஒரு சிக்கலான மற்றும் பல்துறை உறுப்பு ஆகும், இது பேச்சு, சுவை மற்றும் செரிமானம் ஆகியவற்றில் முக்கிய பங்கு வகிக்கிறது.

இது தசைகளின் சிக்கலான வலையமைப்பைக் கொண்டுள்ளது. மனித நாக்கில் மொத்தம் 17 தசைகள் உள்ளன, ஒவ்வொன்றும் அதன் தனித்துவமான செயல்பாட்டைக் கொண்டுள்ளன. திருக்குறளின் 17 வது அதிகாரம் அழுக்காறாமை. இந்த உலகத்தில் பல தீமைகளுக்கு காரணமான குணம் இது.இந்த ஆமை மட்டும் இருக்கவே கூடாது.

பொறாமை உடையவரைக் கெடுப்பதற்கு எந்தப் பகையும் வேண்டாம்; அதுவே போதும்; பகைவர் கேடு, செய்யத் தவறினாலும், அது தவறாமல் கேட்டைத் தந்துவிடும். உண்பதூஉம் இன்றிக் கெடும்.

17-வது குறள் அற்புதமானதுநெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி தான்நல்கா தாகி விடின்.மேகம் கடலிலிருந்து நீரைக் கொண்டு அதனிடத்திலேயே பெய்யாமல் விடுமானால், பெரிய கடலும் தன் வளம் குன்றிப் போகும்.17வது அதிகாரம் எது கூடாது? (பொறாமை) என்று சொல்கிறது. 17 வது குறட்பா எது அவசியம்? (மேகம் போல கொடுக்கும் குணம்) என்பதைச் சொல்கிறது. அடுத்து பிரசித்தி பெற்ற 18 ன் சிறப்பைப் பார்ப்போம்.

தொகுப்பு: முனைவர் ஸ்ரீராம்

The post பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்க எண்களின் அதிசயங்கள் (15,16,17) appeared first on Dinakaran.

Related Stories: