தீண்டாமை வேலி அமைப்பதை ஒருபோதும் ஏற்க முடியாது: ஐகோர்ட் கிளை கண்டிப்பு

மதுரை: தீண்டாமை வேலி அமைப்பதை ஒருபோதும் ஏற்க முடியாது என ஐகோர்ட் கிளை கூறியுள்ளது. கரூர் மாவட்டம், சித்திரசீலமநாயக்கனூரைச் சேர்ந்த சின்னமுத்து, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: நான் மற்றும் எனது உறவினர்கள் வெளியூர் சென்று வேலை பார்த்து வருமானம் ஈட்டுகிறோம். எங்கள் சமூகத்திற்குள் உள்ள வெவ்வேறு உட்பிரிவுகளுக்குள் திருமணம் செய்து சாதியின் புனிதத்தை கெடுத்துவிட்டதாக கூறி எங்களை ஊரைவிட்டு ஒதுக்கியுள்ளனர். உறவினர் மகன் திருமணத்தை பொதுக்கோயில் முன்பு நடத்தக் கூடாது எனவும் தடை விதித்திருந்தனர். நீதிமன்ற உத்தரவுப்படி போலீசார் பாதுகாப்புடன் திருமணம் நடந்தது.

கடந்த அக். 3ல் வேலைக்கு சென்று திரும்பிய நாங்கள் வீட்டிற்கு சென்றோம். ஆனால், எங்கள் வீடுகளுக்கு செல்லும் பாதையை மறித்து வேலி அமைத்து தடுத்துள்ளனர். எங்களுக்கு சொந்தமான பட்டா நிலங்களில் தற்காலிக ஷெட் அமைத்துள்ளனர். எங்களது வீட்டை காலி செய்யும் வரை வேலியை அகற்ற மாட்டோம் எனக்கூறி மிரட்டுகின்றனர். ஊர் பொதுக்குழாயில் தண்ணீர் பிடிக்கக் கூடாது. பொது சுடுகாட்டிற்கு வரக்கூடாது என மிரட்டுகின்றனர். எனவே, எங்களது வீட்டிற்கு செல்லவிடாமல் போடப்பட்டுள்ள தீண்டாமை வேலியை அகற்றுமாறும், அபகரித்துள்ள எங்களது சொத்துக்களை மீட்டுத் தருமாறும், பொதுப்பாதை, சுடுகாடு, தண்ணீர் குழாய் உள்ளிட்டவற்றை நாங்கள் பயன்படுத்த அனுமதிக்குமாறும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி ஜி.இளங்கோவன் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு வக்கீல் சக்திகுமார் ஆஜராகி, ‘‘மனுதாரர் தரப்பு புகார் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி, ‘‘வேலி அமைக்கப்பட்டது பட்டா நிலமா, அல்லது அரசு புறம்போக்கு நிலமா, தீண்டாமையை பின்பற்றும் வகையில் வேலி அமைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து போலீசார் விசாரிக்க வேண்டியது அவசியம். உண்மையில் அது தீண்டாமை வேலியாக இருந்தால் அதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. இது கவனத்தில் கொள்ள வேண்டிய குற்றச்சாட்டாகும்’’ என்றார். பின்னர், இந்த விவகாரத்தில் போலீசார் மற்றும் அரசுத் தரப்பில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டு விசாரணையை நவ. 28க்கு நீதிபதி zyfyh வைத்தார்.

The post தீண்டாமை வேலி அமைப்பதை ஒருபோதும் ஏற்க முடியாது: ஐகோர்ட் கிளை கண்டிப்பு appeared first on Dinakaran.

Related Stories: