தனியார் குடிநீர் லாரிகளால் சாலை அமைக்கும் பணி பாதிப்பு: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

வேளச்சேரி: மேடவாக்கம் ஊராட்சியில் வடக்குபட்டு மெயின் ரோடு 1.8 கிலோ மீட்டர் நீளத்தில் அமைந்துள்ளது. இதில், 5 தனியார் பள்ளிகள் மற்றும் பல தனியார் அடுக்குமாடி குடியிருப்புகள், ஏராளமான வீடுகள் உள்ளன. தினசரி 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர். இந்தசாலை, கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக சீரமைக்கப்படாததால், குண்டும் குழியுமானது. இதனால் இப்பகுதி மக்கள் சிரமப்பட்டு வந்தனர். அதனால் கடந்த ஆண்டு, புதிய சாலை அமைக்க வலியுறுத்தி அப்பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டம் செய்தனர். அப்போது, உள்ளாட்சி துறை அதிகாரிகள் நேரில் வந்து, புதிய சாலை அமைக்கப்படும் என உறுதி அளித்தனர்.

இதையடுத்து சாலையை சீரமைக்க, கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.3.15 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, புதிய சாலை மற்றும் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணி கடந்த ஜூன் மாதம் துவங்கியது. இந்த சாலை பணி டிசம்பர் 16க்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் சாலை வழியாக சென்று தனியார் விவசாய கிணறுகள் மற்றும் ஆழ்துளை கிணறுகளில் இருந்து தண்ணீர் எடுத்து சென்று விற்பனை செய்யும் 40க்கும் மேற்பட்ட டேங்கர் லாரிகள் தினசரி 200 முறைக்கும் மேலாக செல்வதால் சாலை பணிக்கு இடையூறாக உள்ளது.

அதனால் கடந்த 5 மாதத்தில் 100 மீட்டர் தூரத்திற்கு கூட சாலை பணி முடியாமல் மந்தகதியில் நடந்து வருகிறது. தற்போது மழைக்காலம் தொடங்கியுள்ளதால், சாலை பள்ளங்களில் தண்ணீர் தேங்கி, அப்பகுதி மக்கள் அவதிக்குள்ளாகின்றனர். எனவே, இந்த டேங்கர் லாரிகளுக்கு தடை வித்து, சாலை பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தகோரி, அப்பகுதி மக்கள் நேற்று முன்தினம் டேங்கர் லாரிகளை சிறைபிடிக்க வந்தனர். தகவலறிந்து வந்த பள்ளிக்கரணை போலீசார் பொதுமக்களிடம், ‘‘நீங்கள் கோரிக்கை மனு வழங்கினால் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்படும்,’’ என கூறினர். இதையடுத்து அப்பகுதி மக்கள் கோரிக்கை மனு கொடுத்து விட்டு கலைந்து சென்றனர்.

The post தனியார் குடிநீர் லாரிகளால் சாலை அமைக்கும் பணி பாதிப்பு: நடவடிக்கை எடுக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: