பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் குருபூஜை, ஜெயந்தி விழாவை முன்னிட்டு நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!!

ராமநாதபுரம்: பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் குருபூஜை மற்றும் ஜெயந்தி விழாவை முன்னிட்டு நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 116வது பிறந்தநாள் விழா தமிழகம் முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் அமைந்துள்ள முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் 61வது குரு பூஜை விழா விமர்சையாக நடைபெற்று வருகிறது.

கடந்த 28ம் தேதி தொடங்கிய இந்த விழா 3 நாட்கள் தொடர்ந்து நடைபெறும். தமிழகம் முழுவதும் இருந்து மக்கள் அங்கு சென்று பூஜைகளில் பங்கேற்றனர். இன்று அரசு விழாவாக கொண்டாடப்படுவதால் அரசியல் கட்சி தலைவர்கள் பலர் வருகை தருகிறார்கள். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்றே மதுரை வந்திருந்தார். மதுரை கோரிபாளையத்தில் இருக்கக்கூடிய பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு தற்போது நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.

முதல்வருடன் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, பெரியகருப்பன், கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், மூர்த்தி, அன்பில் மகேஷ், பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் பங்கேற்று தேவரின் நினைவிடத்தில் மலர் மாலை வைத்து மரியாதை செலுத்தினர். முதல்வர் வருகைக்காக நினைவிடத்தை சுற்றி 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தென்மண்டல ஐ.ஜி நரேந்திரன் நாயர் தலைமையில் 4 டிஐஜிகள், 30 எஸ்.பிகள் முன்னிலையில் 12 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

The post பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் குருபூஜை, ஜெயந்தி விழாவை முன்னிட்டு நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!! appeared first on Dinakaran.

Related Stories: