ராம்நாத் கோவிந்த் தலைமையிலான ஒரே நாடு ஒரே தேர்தல் குழுவை சந்திக்கிறது சட்ட ஆணையம்

புது டெல்லி: ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டம் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள ராம் நாத் கோவிந்தின் குழுவை சட்ட ஆணையம் இன்று சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்ற மக்களவை, மாநிலத்தின் சட்டப் பேரவைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தின் தலைமையில் குழு ஒன்று செப்டம்பர் 2ம் தேதி அமைக்கப்பட்டது. இந்த குழுவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, சட்ட அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால், முன்னாள் இந்திய நிர்வாக சேவை அதிகாரி என்.கே.சிங், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் குலாம் நபி ஆசாத், மக்களவை முன்னாள் பொதுச் செயலாளர் சுபாஷ் காஷ்யப், மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

கடந்த செப்டம்பர் 23ம் தேதி நடைபெற்ற குழுவின் முதல் கூட்டத்தில் தேசிய கட்சிகள், மாநில அரசுகளில் அங்கம் வகிக்கும் கட்சிகள் மற்றும் நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் பெற்றுள்ள கட்சிகள் தங்கள் ஆலோசனைகளை வழங்குவதற்காக அந்தந்த கட்சிகளின் பிரதிநிதிகளை அழைப்பது என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில் ராம்நாத் கோவிந்தின் தலைமையில் அமைக்கப்பட்ட ஒரே நாடு ஒரே தேர்தல் குழுவை நீதிபதி ரீது ராஜ் அவஸ்தி தலைமையிலான சட்ட ஆணையத்தின் உறுப்பினர்கள் இன்று சந்தித்து தங்கள் பரிந்துரையை வழங்குவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பில் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் யோசனையை சட்ட ஆணையம் ஆதரிக்கும் என்றும், இந்த திட்டத்தை நிறைவேற்றி முடிக்க ஒரு காலக்கெடுவை சட்ட ஆணையம் பரிந்துரைக்கும் என்று கூறப்படுகிறது.

The post ராம்நாத் கோவிந்த் தலைமையிலான ஒரே நாடு ஒரே தேர்தல் குழுவை சந்திக்கிறது சட்ட ஆணையம் appeared first on Dinakaran.

Related Stories: