கிரிப்டோகரன்சி முதலீடுகள் பெயரில் மோசடி 26 போலி இணையதளங்களை பட்டியலிட்டது ‘ஈடி’

 

புதுடெல்லி: அதிக லாபம் தருவதாகக் கூறி கிரிப்டோகரன்சி பெயரில் பொதுமக்களிடம் மோசடி செய்து வந்த 26 போலி இணையதளங்களை அமலாக்கத்துறை அடையாளம் கண்டுள்ளது.
கடந்த 2015ம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் ஒரு மெகா மோசடி கும்பல், கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கிளை பரப்பி முதலீட்டாளர்களை ஏமாற்றி வந்துள்ளது.

இது தொடர்பாக அமலாக்கத்துறை நடத்திய தீவிர சோதனையில், இந்த மோசடி கும்பல் கிரிப்டோகரன்சி வர்த்தகம் என்ற பெயரில் பொதுமக்களிடமிருந்து கோடிக்கணக்கில் பணத்தை வசூலித்தது தெரியவந்தது. தற்போது இந்த மோசடிக்குப் பயன்படுத்தப்பட்ட கோல்டுபிக்கர், ஃபின்கார்ப், மை கோல்டுரேவ் உள்ளிட்ட 26 போலி இணையதளங்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணைக்குப் பின் அதிகாரப்பூர்வமாகப் பட்டியலிட்டுள்ளனர். இந்த மோசடி கும்பல் பிரபல நிபுணர்களின் புகைப்படங்களை அவர்களின் அனுமதியின்றி விளம்பரத்திற்குப் பயன்படுத்தி, வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் மக்களைக் கவர்ந்துள்ளனர்.

ஆரம்பத்தில் முதலீடு செய்தவர்களுக்குச் சிறிய தொகையை லாபமாகக் கொடுத்து நம்பிக்கையை ஏற்படுத்திய இவர்கள், பின்னர் ‘ஹவாலா’ மற்றும் பி2பி முறைகள் மூலம் பணத்தை வெளிநாடுகளுக்குக் கடத்தியுள்ளனர். இதுகுறித்து அமலாக்கத்துறை வெளியிட்ட தகவலில், ‘இந்தக் கும்பல் சட்டவிரோதமாகச் சேர்த்த பணத்தைக் கொண்டு இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் ஏராளமான அசையும் மற்றும் அசையா சொத்துக்களை வாங்கியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: