சொன்னதை செய்தவர் அமைச்சர் உதயநிதி: எம்பி தயாநிதி மாறன் பாராட்டு

சென்னை: எழும்பூர், மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி அரங்கில் 2வது சப்-ஜூனியர் தென் மண்டல சாம்பியன்ஷிப் ஹாக்கி போட்டி அக்.17 ஆம் தேதி தொடங்கியது. இப்போட்டியில் சிறுவர், சிறுமிகளுக்கான பிரிவுகளில் தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலுங்கானா அணிகள் பங்கேற்றன. அதில் நேற்று நடந்த சிறுமிகளுக்கான பைனலில் ஆந்திரா 5-0 என்ற கோல் கணக்கில் தமிழ்நாடு அணியை வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. கர்நாடகா 3வது இடம் பிடித்தது. சிறுவர் பிரிவு பைனலில் கர்நாடகா 3-2 என்ற கோல் கணக்கில் தமிழ்நாடு அணியை வீழ்த்தி தங்கப் பதக்கத்தை முத்தமிட்டது. ஆந்திரா 3வது இடம் பிடித்தது. வெற்றி பெற்ற அணிகளுக்கு மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினரும், திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி செயலாளருமான தயாநிதி மாறன் பதக்கங்களை அணிவித்து, பரிசுக் கோப்பைகளை வழங்கினார்.

முன்னதாக அவர் பேசும்போது, ‘எல்லா வீரர்களுக்கும், வீராங்கனைகளுக்கும் எனது பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவிக்கிறேன். தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதவி ஏற்றதும், ஒடிஷாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது அந்த மாநில விளையாட்டுத் துறையோடு இணைந்து தமிழ்நாடு விளையாட்டுத் துறையை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அறிவித்திருந்தார். அந்த அறிவிப்புக்கு சாட்சியாக மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி அரங்கம் இன்று காட்சி அளிக்கிறது. சொன்னதை செய்தவர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்’ என்றார். விழாவில்மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லாவும் பங்கேற்று வீரர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

The post சொன்னதை செய்தவர் அமைச்சர் உதயநிதி: எம்பி தயாநிதி மாறன் பாராட்டு appeared first on Dinakaran.

Related Stories: