வங்கக்கடலில் காற்றழுத்தம் 25ம் தேதி கரையை கடக்கும்: தென் தமிழகத்தில் மழை நீடிக்கும்

சென்னை: வடகிழக்கு பருவமழை பெய்யத் தொடங்கியதை அடுத்து, வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று 25ம் தேதி வங்கதேசத்தில் கரையைக் கடக்கும் என்றும் அதன் காரணமாக தென் தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் இந்த ஆண்டு தொடங்க வேண்டிய வட கிழக்கு பருவமழை நேற்று முன்தினம் பெய்யத் தொடங்கியுள்ளது. இந்த பருவத்தில் முதற்கட்டமாக 21ம் தேதியில் தென் கிழக்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய வங்கக் கடல் பகுதிகளில் ஒரு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது. நேற்றைய நிலவரப்படி அந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிக்கு நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றதுடன் நேற்று காலையில் ஒடிசாவுக்கு தெற்கே சுமா் 590 கிமீ தொலைவிலும், மேற்கு வங்கத்துக்கு 740 கிமீ தொலைவிடும் நிலை கொண்டு இருந்தது.

இந்நிலையில், நேற்று மாலையில் அது மேலும் வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி வடமேற்கு திசையில் நகர்ந்து செல்கிறது. 25ம் தேதி சிட்டகாங் வழியாக வங்கதேசம் வழியாக கரையைக் கடக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. அதேபோல, அரபிக் கடல் பகுதியில் நிலை கொண்டுள்ள தேஜ்புயல் நேற்று அதிதீவிரப் புயலாக வலுப்பெற்று வடமேற்கு திசையில் நகர்ந்து செல்கிறது. இது 24ம் தேதி மேலும் வலுப்பெற்று மிகத்தீவிரப் புயலாக மாறி ஏமன் பகுதி கடற்கரை வழியாக கரையைக் கடக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இந்த இரு கடல்களில் நிலை கொண்டுள்ள புயல் காரணமாக தமிழ்நாட்டில் நேற்று பெரும்பாலான இடங்களில் ஈரப்பதம் உறிஞ்சப்பட்டு வறண்ட வானிலை நிலவியது. இருப்பினும், தென் தமிழக உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும், கடலோர தமிழக மாவட்டங்கள் மற்றும் வட தமிழக உள்மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் மழை பெய்துள்ளது.

அதிகபட்சமாக சென்னை நகரின் புறநகர்ப்பகுதியில் அயனாவரம் பகுதியில் 50மிமீ மழை பெய்துள்ளது. சிங்கம்புணரி 40மிமீ, தல்லாகுளம், மதுரை மற்றும் மதுரை புறநகர்ப் பகுதிகளில் 30மிமீ, மேட்டுப்பாளையம், திருமங்கலம், பேரையூர், குளித்தலை, திருவாரூர், முசிறி, காரியாப்பட்டி 20மிமீ, விராலிமலை, சென்னை, வளசரவாக்கம், கொளத்தூர், பெரம்பூர், மாதவரம், மதுரவாயல், மீனம்பாக்கம், திருவிக நகர், குன்றத்தூர், பெருங்குடி பகுதிகளில் 10மிமீ மழை பெய்துள்ளது. இதற்கிடையே, கரூர், நீலகிரி மாவட்டங்களில் 5 டிகிரி செல்சியசுக்கும் அதிகமாக வெப்ப நிலை உணரப்பட்டது. கோவை, ஈரோடு, மதுரை, திண்டுக்கல், திருவள்ளூர் மாவட்டங்களில் இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உணரப்பட்டது.

இதையடுத்து, தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வட தமிழகத்தில் சில இடங்களிலும் இன்று ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும். சென்னையில் பொதுவாக மேகமூட்டம் காணப்படும். நகரின் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். வங்கக் கடலில் மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் இன்று முதல் 25ம் தேதி வரை காற்றின் வேகம் படிப்படியாக உயர்ந்து மணிக்கு 60 கிமீ வேகத்திலும் இடையிடையே 70 கிமீ வேகத்திலும் வீசக்கூடும். அதற்கு பிறகு காற்றின் வேகம் படிப்படியாக குறையத் தொடங்கும். எனவே மேற்கண்ட பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகின்றனர்.

The post வங்கக்கடலில் காற்றழுத்தம் 25ம் தேதி கரையை கடக்கும்: தென் தமிழகத்தில் மழை நீடிக்கும் appeared first on Dinakaran.

Related Stories: