வந்தவாசியில் விதை திருவிழா 200 காய்கறி விதைகளை காட்சிப்படுத்திய விவசாயிகள்

வந்தவாசி : வந்தவாசியில் நடந்த விதை திருவிழாவில், 200 காய்கறி விதைகளை விவசாயிகள் காட்சிப்படுத்தினர்.திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டார இயற்கை விவசாயிகள் சார்பில் விதைத்திருவிழா அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நேற்று நடந்தது. இதில், நீலகிரி, திருவண்ணாமலை, விழுப்புரம், சென்னை, திருப்பூர், சேலம், செங்கல்பட்டு உட்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த இயற்கை விவசாயிகள் கலந்து கொண்டு 70 அரங்குகள் அமைக்கப்பட்டு 200 வகையான காய்கறி விதைகள், 100க்கும் மேற்பட்ட நெல் விதைகளை காட்சிப்படுத்தினர்.

மேலும், பாரம்பரிய உணவு வகையான கருப்பு கவுனி பாயாசம், முரவாட்டு வாள் கஞ்சி, வாசனை சீரக சம்பா பிரிஞ்சி, ரத்தசாலி அரிசி வகை சாம்பார் சாதம், தூய மல்லி தயிர்சாதம் ஆகிய பாரம்பரிய உணவுகள் சலுகை விலையில் 1000க்கும் மேற்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டது.

விழாவில், தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன், இயற்கை விவசாயி ஜெயசந்திரன், பாரம்பரிய அரிசி கூட்டாளர் மேனகா, மரபு விதைகள் மீட்பாளர் பிரியா ராஜ்நாராயணன் ஆகியோர் கலந்து கொண்டு இயற்கை வேளாண்மையால் ஏற்படும் நம்மைகள் குறித்து விளக்கி கூறினர்.மேலும், சிலம்பாட்டம், 70 கிலோ எடை கொண்ட இளவட்ட கல் தூக்குதல் ஆகியன நடந்தது. இந்த கண்காட்சியில் 4,000 மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

The post வந்தவாசியில் விதை திருவிழா 200 காய்கறி விதைகளை காட்சிப்படுத்திய விவசாயிகள் appeared first on Dinakaran.

Related Stories: