நாகர்கோவிலில் 2 பைக்குகள் நேருக்கு நேர் மோதல்

*கல்லூரி மாணவர்கள் உள்பட 4 பேர் படுகாயம்

நாகர்கோவில் : நாகர்கோவிலில் நேற்று முன் தினம் இரவு 2 பைக்குகள் நேருக்கு நேர் மோதி கல்லூரி மாணவர்கள் உள்பட 4 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சையில் உள்ளனர்.குமரி மாவட்டத்தில் சாலை விபத்துக்கள் அதிகரித்து வருகின்றன. விபத்துக்களை கட்டுப்படுத்தும் வகையில் தற்போது போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தி வருகிறார்கள். குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள், அதிக வேகம், செல்போன் டிரைவிங், ஹெல்மெல்ட் அணியாதது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ், வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்படுகிறது.

இரவு நேர ரோந்து பணியின் போதும், வாகன சோதனை நடத்தி அதிகளவில் வழக்குகள் பதிந்து, அபராதம் விதித்து வருகிறார்கள். போலீசாரின் நடவடிக்கைகள் ஒருபுறம் இருந்தாலும் அதி வேகமாக செல்லும் பைக்குகள், வாகனங்களால் விபத்துக்கள் அதிகம் நடந்து வருகின்றன. இந்த நிலையில் நாகர்கோவில் பள்ளிவிளையை சேர்ந்த 2 கல்லூரி மாணவர்கள் நேற்று முன் தினம் இரவு காவல்கிணறு – பார்வதிபுரம் நெடுஞ்சாலையில் வடசேரி கட்டையன்விளை பகுதியில் பைக்கில் சென்று கொண்டிருந்தனர். அப்போது பார்வதிபுரத்தில் இருந்து பைக்கில் மினி பஸ் ஊழியர்கள் 2 பேர் வந்தனர்.

இரு பைக்குகளும் கண் இமைக்கும் நேரத்தில் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. மோதிய வேகத்தில் பைக்குகளில் இருந்த 4 பேரும் தூக்கியெறியப்பட்டனர். விபத்தை பார்த்ததும் அந்த பகுதியில் இருந்தவர்கள், படுகாயம் அடைந்தவர்களை மீட்டு, தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.

இவர்கள் நால்வரும் தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர். விபத்து குறித்து அறிந்ததும் வடசேரி போலீசார் மற்றும் நாகர்கோவில் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். விபத்து நடந்த பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் உள்ளன. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

The post நாகர்கோவிலில் 2 பைக்குகள் நேருக்கு நேர் மோதல் appeared first on Dinakaran.

Related Stories: