ஆனைப்பள்ளம் கிராமத்தில் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்: ஏராளமான பக்தர்கள் தரிசனம்

உத்திரமேரூர்: ஆனைப்பள்ளம் கிராமத்தில் உள்ள ஸ்ரீமாரியம்மன் கோயிலில் நடந்த கும்பாபிஷேகம் விழாவில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். உத்திரமேரூர் அடுத்த ஆனைப்பள்ளம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில், கடந்த சில மாதங்களாக புதியதாக கோபுரம் அமைக்கும் பணி நடைபெற்றது. இப்பணிகள் நிறைவடைந்து, கும்பாபிஷேகம் விழா நேற்று வெகு விமர்சையாக நடந்தது. இந்த கும்பாபிஷேகத்தையொட்டி, கடந்த 2 நாட்களாக வாஸ்து ஹோமம், சாந்தி ஹோமம், அக்னி பிரதிஷ்டை, கும்ப ஆராதனை ஹோமம் உள்ளிட்ட ஹோமம் மற்றும் பூஜைகள் செய்யப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, காலை 10 மணியளவில் 3ம் கால யாகசாலை பூஜை முடிந்தபின் மேளதாளங்கள் முழங்க வாண வேடிக்கைகளுடன் சிவாச்சாரியார்கள், புனித நீர் கொண்டு வந்து கலசங்களின் மீது ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. விழாவில், ஆனைப்பள்ளம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் கும்பாபிஷேகத்தை கண்டுகளித்தனர். பின்னர், கோயில் வளாகத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்காக ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.

The post ஆனைப்பள்ளம் கிராமத்தில் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்: ஏராளமான பக்தர்கள் தரிசனம் appeared first on Dinakaran.

Related Stories: