சென்னை மாநகராட்சிப் பள்ளியில் சந்திரயான்-3 மாதிரி கண்காட்சி; விக்ரம் லேண்டரை போன்ற அரங்கத்தை கண்டு மாணவர்கள் வியப்பு..!!

சென்னை: மாணவர்களுக்கு விண்வெளி ஆராய்ச்சி குறித்த ஆர்வத்தை தூண்டும் நோக்கி சென்னை மாநகராட்சி பள்ளியில் சந்திரயான் மாதிரி கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. நிலவின் தென் துருவத்தில் கால்பதித்து உலக நாடுகளை இந்தியாவை நோக்கி திருப்பிய பெருமை சந்திரயான் 3 விண்கலத்தையே சாரும். நிலவு தொடர்பான ஆராய்ச்சியில் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தியிருக்கும் இந்த சாதனையை பள்ளி மாணவர்கள் விரிவாக தெரிந்துகொள்ளும் வகையில் நுங்கம்பாக்கம் மாநகராட்சி பெண்கள் மேல்நிலை பள்ளியில் சந்திரயான் மாதிரி வடிவிலான கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.

6 லட்சம் ரூபாய் செலவில் சென்னை மாநகராட்சி அமைத்துள்ள இந்த கண்காட்சியை அடுத்த மாதம் 14ம் தேதி வரை தினமும் காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை மாணவர்கள் கட்டணம் இல்லாமல் காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நிலவில் தரையிறங்கியுள்ள விக்ரம் லேண்டர் போல வடிவமைக்கப்பட்ட அரங்கின் உள்ளேயே மாணவர்கள் அமர்ந்து சந்திரயான் குறித்து காணொளியை காண திரையும் அமைக்கப்பட்டுள்ளது. அதனை பார்த்த பின்னர் மாணவர்களுக்கு எழும் சந்தேகங்களுக்கு ஆசிரியர்கள் விளக்கம் அளிக்கின்றனர்.

கண்காட்சி அரங்கை சுற்றி சூரிய குடும்பத்தின் கோள்களின் விவரங்களும், அறிவியலாளர்கள் சாதனைகளும் படங்களாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இதுமட்டுமின்றி சூரியன், நட்சத்திரங்கள் உட்பட வான் செயல்களை மாணவர்கள் பார்வையிட ஏதுவாக தொலைநோக்கியும் வைக்கப்பட்டுள்ளது. நிலவுக்கே சென்று விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவரை நேரில் பார்ப்பது போன்ற அனுபவத்தை இந்த கண்காட்சி கொடுப்பதாக மாணவர்கள் தெரிவிப்பதே கண்காட்சியின் சிறப்பம்சமாக உள்ளது.

The post சென்னை மாநகராட்சிப் பள்ளியில் சந்திரயான்-3 மாதிரி கண்காட்சி; விக்ரம் லேண்டரை போன்ற அரங்கத்தை கண்டு மாணவர்கள் வியப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: