கடல்சார் பொருளாதாரத்துக்கு ரூ.23,000 கோடியில் திட்டம்: பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்

மும்பை: சர்வதேச வர்த்தகத்தை மாற்றி அமைக்கும் கடல்சார் பொருளாதாரத்தை மேம்படுத்த ரூ.23,000 கோடி மதிப்பிலான திட்டத்துக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். மும்பையில் நடக்கும் 3வது சர்வதேச கடல்சார் இந்தியா உச்சி மாநாட்டில் 70 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இதில் காணொலி மூலம் பங்கேற்ற பிரதமர் மோடி, சர்வதேச வர்த்தகத்தை மாற்றி அமைக்கும் கடல்சார் பொருளாதாரத்தை மேம்படுத்த ரூ.23,000 கோடி மதிப்பிலான திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினார்.

அப்போது அவர் பேசுகையில், “ஜி-20 தலைமை பதவியில் இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தடம் (ஐஎம்இஇசி) என்ற ஒரு வரலாற்று ஒருமித்த கருத்தை இந்தியாவால் உருவாக்க முடிந்தது. இந்த பொருளாதார வழித்தடம் சர்வதேச கடல்சார் வர்த்தகத்தை மாற்றி அமைக்கும் திறன் கொண்டது. இதன் மூலம் சர்வதேச மற்றும் பிராந்திய அளவிலான வர்த்தகத்தில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கான சாத்திய கூறுகள் உள்ளன. இது அரசு மற்றும் பொதுமக்கள் பங்களிப்புடன் அமைக்கப்பட உள்ளது,” என்று தெரிவித்தார்.

அவர் மேலும் கூறிய போது, “கடல்சார் பொருளாதாரத்திற்கான நீண்ட கால திட்டத்தின்கீழ் அடுத்த தலைமுறைக்கான துறைமுகங்கள், சர்வதேச கண்டெய்னர் பரிமாற்ற துறைமுகங்கள், தீவு மேம்பாடு, உள்நாட்டு நீர்வழி போக்குவரத்து, கார்பன் உமிழ்வை குறைத்தல், கப்பல் கட்டுமானம், சீரமைத்தல் மற்றும் மறுசுழற்சி, அதற்கான நிதி மற்றும் கடல்சார் சுற்றுலா உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படும்,” என்று கூறினார். இது தவிர, ரூ.7.16 லட்சம் கோடி மதிப்பிலான கடல்சார் துறை சார்ந்த 300க்கும் மேற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களை நாட்டுக்கு அவர் அர்ப்பணித்தார்.

*2040-ல் நிலவில் முதல் இந்தியர்
மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் வளர்ச்சி பணிகள் குறித்து இஸ்ரோ தலைவர் சோம்நாத் உடன் கலந்து ஆலோசித்த பிரதமர் மோடி, வரும் 2035ம் ஆண்டிற்குள் இந்திய விண்வெளி மையத்தை நிறுவவும், 2040ம் ஆண்டில் நிலவுக்கு முதல் இந்தியரை அனுப்பும்படியும் கேட்டுக் கொண்டார்.

The post கடல்சார் பொருளாதாரத்துக்கு ரூ.23,000 கோடியில் திட்டம்: பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார் appeared first on Dinakaran.

Related Stories: