வேட்பாளர் தேர்வில் மொபைலில் கேம்ஸ் விளையாடிய சட்டீஸ்கர் முதல்வர்

ராய்ப்பூர்: முதல்வர் பூபேஷ் பாகேல் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கும் சட்டீஸ்கரில் வரும் நவம்பர் 7 மற்றும் 17 ஆகிய தேதிகளில் 2 கட்டமாக சட்டபேரவை தேர்தல் நடக்கிறது. தேர்தலையொட்டி பாஜ கட்சி 85 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளது. வேட்பாளர்களை தேர்வு செய்வதற்காக காங்கிரஸ் கட்சியின் கூட்டம் ராய்ப்பூரில் உள்ள ராஜிவ் பவனில் நேற்றுமுன்தினம் நடந்தது. கூட்டத்தில் முதல்வர் பூபேஷ் பாகேல் தனது செல்போனில் கேம் விளையாடி கொண்டிருக்கும் படத்தை பாஜ வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக பாஜ தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் அமித் மாளவியா டிவிட்டரில், என்னதான் முயற்சித்தாலும், அரசு மீண்டும் வரப்போவதில்லை என்று அவருக்கு தெரியும். அதனால்தான் ஓய்வெடுக்கும் விதமாக பாகேல் செல்போனில் கேண்டி கிரஷ் கேம்ஸ் விளையாடி கொண்டிருக்கிறார் என குறிப்பிட்டிருந்தார்.

* பூபேஷ் பாகேல் பதிலடி

பாஜ குற்றச்சாட்டுக்கு பதிலளித்துள்ள பூபேஷ் பாகேல் குறிப்பிடுகையில், மாநிலத்தின் பாரம்பரிய விளையாட்டுகளான கெட்டி, கில்லி தண்டா போன்ற விளையாட்டுகளை நான் விளையாடுவதற்கு பாஜ எதிர்ப்பு தெரிவித்தது. வேட்பாளர் தேர்வு கூட்டம் நடக்கும் முன் நான் எனது செல்போனில் கேண்டி கிரஷ் கேம் விளையாடும் படத்தை வெளியிட்டு தற்போது பாஜ எதிர்ப்பு தெரிவித்துள்ளது. கேண்டி கிரஷ் எனக்கு பிடித்தமான விளையாட்டு. அனைத்து கட்டத்தையும் தாண்டி வந்து விட்டேன். தேர்தலில் யாருக்கு ஆசீர்வாதம் அளிக்க வேண்டும் என்பது சட்டீஸ்கர் மக்களுக்கு தெரியும் என குறிப்பிட்டுள்ளார்.

The post வேட்பாளர் தேர்வில் மொபைலில் கேம்ஸ் விளையாடிய சட்டீஸ்கர் முதல்வர் appeared first on Dinakaran.

Related Stories: