ஒன்றிய அரசை கண்டித்து மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல் : திண்டுக்கல்லில் நூறு நாள் வேலை திட்டத்தில் பணியாற்றிய மாற்றுத்திறனாளிகளுக்கு சம்பளம் வழங்கக்கோரி அனைத்து வகை மாற்றுத்திறனாளி மற்றும் பாதுகாப்போர் உரிமைக்கான சங்கம் சார்பில் தலைமை தபால் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் ஸ்டாலின் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில், 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றிய மாற்றுத் திறனாளிகளுக்கு கடந்த 5 வாரம் முதல் 8 வாரம் வரை சம்பளம் வழங்கவில்லை. அதனை உடனே வழங்க வேண்டும் எனக்கோரி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பினர்.

* பட்டிவீரன்பட்டி அருகே சித்தரேவு தபால் நிலையம் முன்பாக தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க ஆத்து£ர் ஒன்றிய தலைவர் ராமசாமி தலைமை தாங்கினார். செயலாளர் மலைச்சாமி, சித்தரேவு தெற்கு கிளை செயலாளர் நாச்சிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் உழைப்பிற்கான கூலியை தாமதமின்றி வழங்க வேண்டும், வேலை செய்த 15 நாட்களுக்குள் சம்பளத்தை வழங்க வேண்டும், தாமதத்திற்கான கட்டணத்தையும் சேர்த்து வழங்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தின் போது கோஷமிட்டனர்.அதன்பின்பு சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்கக்கோரி மாற்றுத்திறனாளிகள் கையொப்பமிட்ட மனுவை மாவட்ட நிர்வாகத்திடம் வழங்க உள்ளதாக தெரிவித்தனர். பட்டிவீரன்பட்டி போலீஸ் எஸ்ஐ முத்தையா தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

* ஒட்டன்சத்திரத்தில் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் நூறு நாள் வேலை திட்ட தொழிலாளிகளுக்கு சம்பளம் வழங்காமல் இருப்பதற்கு ஆளும் ஒன்றிய அரசை கண்டித்து ஒன்றிய செயலாளர் சிவக்குமார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் ஒட்டன்சத்திரம் தொகுதியைச் சேர்ந்த அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

* சாணார்பட்டியில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைக்கான சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர் கருப்புசாமி தலைமை தாங்கினார். இதில் நூறு நாள் வேலைத்திட்டத்தில் வேலை செய்த மாற்றுத்திறனாளிகளுக்கு கடந்த 10 முதல் 15 வாரங்களாக ஊதியம் தராததை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். இதில் ஒன்றிய தலைவர் முருகன், பொருளாளர் பழனியம்மாள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். பின்னர் சாணார்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் அருள்கலாவதியிடம் மாற்றுத்திறனாளிகள் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் மனு அளித்தனர்.

* பழநி தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் பகத்சிங் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் நகரத் தலைவர் காளீஸ்வரி, நகர செயலாளர் தங்கவேல், ஒன்றியத் தலைவர் மாரியப்பன், ஒன்றிய செயலாளர் கண்ணுச்சாமி உட்பட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதனைத்தொடர்ந்து பழநி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்த குறைதீர் கூட்டத்தில் கோரிக்கைகள் தொடர்பாக மனு அளிக்கப்பட்டது.

The post ஒன்றிய அரசை கண்டித்து மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: