பலியான 14 பேர் உடல்களுக்கு தமிழ்நாடு அமைச்சர்கள் அஞ்சலி பட்டாசு கடையில் கர்நாடக முதல்வர் நேரில் ஆய்வு: உரிமையாளர் உட்பட 3 பேர் கைது வழக்கு சிஐடிக்கு மாற்றம்

ஓசூர்: ஓசூர் அருகே மாநில எல்லையான அத்திப்பள்ளியில் நடந்த பட்டாசு கடை தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. விபத்து நடந்த பட்டாசு கடைக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா நேரில் ெசன்று ஆய்வு செய்தார். இதுதொடர்பான வழக்கு சிஐடிக்கு மாற்றப்படும் என அவர் பேட்டியளித்தார். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சிப்காட் பகுதியில் இருந்து மாநில எல்லையான கர்நாடக மாநிலம் ஆனேக்கல் தாலுகா அத்திப்பள்ளி வரை சாலையின் இருமருங்கிலும் நிரந்தரமாகவும், தற்காலிகமாகவும் ஏராளமான பட்டாசு கடைகள் செயல்பட்டு வருகின்றன.

இதனால், அப்பகுதியை குட்டி சிவகாசி என்றழைக்கின்றனர். நேற்று முன்தினம் சிவகாசியில் இருந்து 3 லாரிகளில் கொண்டு வரப்பட்ட பட்டாசுகளை அத்திப்பள்ளி டோல்கேட் அருகே நவீன் என்பவருக்கு சொந்தமான கடையில் இறக்கி வைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தபோது ஏற்பட்ட தீ விபத்தில் 13 பேர் உயிரிழந்தனர். நேற்று காலை மேலும் ஒருவர் உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது. மற்றவர்களுக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

விபத்தில் பலியானவர்கள் தர்மபுரி மாவட்டம் அரூர் வட்டம் தா.அம்மாப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த வேடப்பன், முனிவேல், இளம்பருதி, ஆகாஷ், ஆதிகேசவன், விஜயராகவன், கிரி, பிரகாஷ், கள்ளக்குறிச்சி பிரபாகரன்(17), வசந்த்ராஜ்(23), அப்பாஸ் (23) என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் தவிர மற்ற 3 பேரின் விவரம் தெரியவில்லை. இந்த விபத்து தொடர்பாக கடை உரிமையாளர் ராமசாமி ரெட்டி, கடை அமைந்திருக்கும் நிலத்தின் உரிமையாளர் அனில் ரெட்டி மற்றும் ராமசாமிரெட்டியின் மகன் நவீன் ரெட்டி ஆகிய மூவரையும் அத்திப்பள்ளி போலீசார் கைது செய்தனர். விபத்து குறித்து தகவலறிந்ததும், நேற்று முன்தினம் இரவு கர்நாடக மாநில துணை முதல்வர் சிவகுமார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரித்தார்.

நேற்று காலை முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார் மற்றும் தமிழ்நாடு அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சக்கரபாணி, கிருஷ்ணகிரி எம்பி செல்லக்குமார், ஓசூர் எம்எல்ஏ பிரகாஷ், ஓசூர் மேயர் சத்யா உள்ளிட்டோர் விபத்து நடந்த இடத்தை நேரில் ஆய்வு செய்தனர். பின்னர் அத்திப்பள்ளி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து கர்நாடக முதல்வர் ஆறுதல் கூறினார். முதல்வர் சித்தராமையா நிருபர்களிடம் கூறியதாவது: பட்டாசு கடை விபத்து வழக்கு விசாரணை, உள்ளூர் போலீசாரிடமிருந்து சிஐடிக்கு மாற்றி உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் மிகவும் துரதிர்ஷ்டவசமானது. ராமசாமி ரெட்டி என்பவரின் பெயரில், லைசென்ஸ் பெற்று பட்டாசு விற்பனை செய்து வந்துள்ளனர். தமிழகத்தில் இருந்து வாகனங்கள் மூலம் கொண்டு வரப்பட்ட பட்டாசுகளை, தொழிலாளர்கள் இறக்கி வைக்கும் பணியில் ஈடுபட்ட போது, தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அதற்கான முழு காரணங்கள் இன்னும் தெரிய வரவில்லை. அங்குள்ள மின் வயர்களோ அல்லது யுபிஎஸ் மூலமாகவோ விபத்து ஏற்பட்டிருக்கலாம். நான் ஆய்வு செய்தவரை, பட்டாசு கடையில் எந்தவித பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்காததால், இந்த விபத்து நடந்துள்ளது தெரிய வந்துள்ளது. கடந்த மாதம் 13ம் தேதி, கடைக்கான லைசென்ஸ் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இதனுடைய அனுமதி 31.10.2028 வரை உள்ளது. அதற்கு முன்பு 18.1.2021 அன்று ஒரு லைசென்ஸ் புதுப்பிக்கப்பட்டுள்ளது. அதனுடைய அனுமதி 28.1.2026 வரை உள்ளது.

ஜெயம்மா என்பவருக்கு சொந்தமான இடத்தில் பட்டாசு கடை செயல்பட்டு வந்துள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு சித்தராமையா கூறினார். இந்நிலையில் விபத்தில் பலியாகி கரிக்கட்டையாக மீட்கப்பட்ட 14 பேரிகளின் உடல்கள் அத்திப்பள்ளி மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தது. அந்த உடல்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சக்கரபாணி உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

* தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.3 லட்சம் நிதி வழங்கல்

பட்டாசு கடை தீ விபத்தில் பலியான 14 பேரும் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள்தான். முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் மற்றும் காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் நிவாரண நிதியாக வழங்கப்படும் என தெரிவித்திருந்தார். முதல்வர் உத்தரவின்பேரில், அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சக்கரபாணி ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். பின்னர் மருத்துவமனைக்கு சென்று காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிப்பதற்கான ஏற்பாடுகளை முடுக்கி விட்டனர். உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு ஆறுதல் தெரிவித்து, நிவாரண நிதியை வழங்கினார்.

* பயங்கர விபத்து நடந்தது எப்படி?

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் இருந்து 3 லாரிகளில் பட்டாசு பெட்டிகளை அத்திப்பள்ளிக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஒரு லாரியில் இருந்த பட்டாசுகளை இறக்கி கடையில் வைத்து விட்டனர். பின்னர், காலியான லாரியை சற்று தள்ளி நிறுத்தி விட்டு அடுத்த லாரியில் இருந்த பட்டாசுகளை இறக்குவதற்காக கடைக்கு முன்பாக மெதுவாக ஓட்டி வந்துள்ளனர். ஆனால், அந்த லாரியில் பாரம் சற்று அதிகமாக இருந்தால், அருகில் சென்ற மின்கம்பியின் மீது உரசியதில் தீப்பொறி விழுந்து தீப்பற்றிக் கொண்டது. முதலில் ஒரு சில பட்டாசுகள் மட்டுமே வெடித்து சிதறிய நிலையில், வாண வெடிகள் சீறிப்பாய்ந்து கடைக்குள் சென்று விழுந்ததில் அங்கிருந்த அனைத்து பட்டாசுகளின் மீது தீப்பற்றி பயங்கர சத்தத்துடன் அடுத்தடுத்து வெடித்து சிதறியது. இதில், பார்சல் இறக்கி கொண்டிருந்த தொழிலாளர்கள் சிக்கி உயிரிழந்துள்ளனர். கடையில் இருந்த பட்டாசு மட்டுமின்றி, வாகனங்களில் இருந்த பட்டாசுகள் மற்றும் கடையில் இருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமானது. பட்டாசு கடை தீ விபத்தால் சுமார் ரூ.4 கோடி மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்திருக்க கூடும் என போலீசார் தெரிவித்தனர்.

The post பலியான 14 பேர் உடல்களுக்கு தமிழ்நாடு அமைச்சர்கள் அஞ்சலி பட்டாசு கடையில் கர்நாடக முதல்வர் நேரில் ஆய்வு: உரிமையாளர் உட்பட 3 பேர் கைது வழக்கு சிஐடிக்கு மாற்றம் appeared first on Dinakaran.

Related Stories: