இன்று முதல் தரமான பாலுக்கு ரூ.1 ஊக்கத்தொகை தீபாவளிக்காக ஆவினில் நெய், பால்கோவா கூடுதல் உற்பத்தி: அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல்

மதுரை: பால் உற்பத்தி மற்றும் பால்பண்ணை மேம்பாட்டுத்துறை சார்பாக தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களின் செயலாட்சியர்களுக்கான பயிற்சி வகுப்பு மதுரையில் நேற்று நடந்தது. பயிற்சியை தொடங்கி வைத்து, பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், நிருபர்களிடம் கூறியதாவது: பால் கொள்முதல் நாளொன்றிற்கு இருந்த 26 லட்சம் லிட்டரை, கடந்த 4 மாதங்களில் 30 லட்சம் லிட்டராக அதிகரித்துள்ளோம். பாலின் தரத்திற்கேற்ற விலையை நடைமுறைப்படுத்தி, விவசாயிகளுக்கு பால் லிட்டருக்கு ரூ.3 முதல் ரூ.5 வரை கூடுதல் லாபம் கிடைக்க வகை செய்யப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கு பாலின் தரத்தை அறியும் கருவி வழங்கப்பட்டுள்ளது. பால் உற்பத்தியைப் பெருக்குவதற்கு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விவசாயிகள் தங்களது ஒட்டுமொத்த உற்பத்தி செலவை கருத்தில்கொண்டு பால் கொள்முதலுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள விலையை உயர்த்திட வேண்டும் என பால் உற்பத்தியாளர்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள். இதுதொடர்பாக முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தீபாவளி பண்டிகை காலத்தையொட்டி ஆவின் நிறுவனம் நெய், பால்கோவா போன்ற இனிப்பு வகைகளின் தேவையை கணக்கிட்டு அதற்கேற்ப உற்பத்தியை அதிகரித்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஆவின் நிறுவனத்தில் தேவைக்கேற்ப மனித ஆற்றலை அதிகரித்து உரிய நேரத்தில் நுகர்வோர்களுக்கு பால் பொருட்கள் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
ஆவின் பால் கூடுதல் விலைக்கு விற்பனை செய்தல், கமிஷன் கேட்டல் போன்ற செயல்களில் ஈடுபடுவோர் குறித்து, ஆதாரத்துடன் புகார் செய்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். பால் உற்பத்தியாளர்கள் வழங்கும் தரமான பாலுக்கு ரூ.1 ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் திண்டுக்கல்லில் இன்று துவக்கப்படுகிறது. ஆவினில் முறைகேடு செய்பவர்கள் தப்பிக்க முடியாது. இதற்கென எஸ்பி தலைமையில் லஞ்ச ஒழிப்புத்துறை செயல்பட்டு வருகிறது. இவ்வாறு தெரிவித்தார்.

The post இன்று முதல் தரமான பாலுக்கு ரூ.1 ஊக்கத்தொகை தீபாவளிக்காக ஆவினில் நெய், பால்கோவா கூடுதல் உற்பத்தி: அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: