மயிலாடுதுறை அருகே தொழிற்சாலையில் நாட்டு வெடிகள் வெடித்து 4 தொழிலாளர்கள் பலி: 4 பேர் படுகாயம்

தரங்கம்பாடி: மயிலாடுதுறை அருகே வெடி தயாரிக்கும் தொழிற்சாலையில் நாட்டு வெடிகள் வெடித்து 4 ெதாழிலாளர்கள் உடல் சிதறி உயிரிழந்தனர். மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே தில்லையாடியை சேர்ந்தவர் ராமதாஸ். இவர், தனது வீட்டிலிருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ள வயல் பகுதி திடலில் நாட்டு வெடி தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வருகிறார். கடந்த 2008 முதல் அரசு அனுமதி பெற்று நடத்தப்பட்டு வரும் இந்த தொழிற்சாலையில் 11 பேர் வேலை செய்கின்றனர். இங்கு திருவிழா மற்றும் இதர விழாக்களுக்கு பயன்படுத்தப்படும் அதிக சத்தம் எழுப்பும் நாட்டு வெடி தயாரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று மதியம் 2.30 மணியளவில் வெடி தயாரித்து வைத்திருந்த குடோனில் திடீரென பயங்கர சத்தத்துடன் நாட்டு வெடிகள் வெடித்து சிதறின.

அப்போது, அருகில் வெடி தயாரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த கிடங்கல் கிராமத்தை சேர்ந்த மாணிக்கம் (23), மூவலூர் கிராமத்தை சேர்ந்த மதன் (22), ராகவன் (23), நிகேஷ் (22) ஆகிய 4 பேர் உடல் சிதறி பலியானார்கள். 4 பேர் பலத்த காயமடைந்தனர். சத்தம் கேட்டு கிராம மக்கள் வந்து படுகாயமடைந்தவர்களை மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் 3 பேர் மதியம் சாப்பிடுவதற்காக வீட்டுக்கு சென்றிருந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். தகவலறிந்து மயிலாடுதுறை டிஆர்ஓ மணிமேகலை, ஆர்டிஓ அர்ச்சனா, நாகப்பட்டினம் மாவட்ட எஸ்பி ஹர்ஷ்சிங் ஆகியோர் நேரில் வந்து விசாரணை நடத்தினர். விபத்து குறித்து பொறையார் போலீசார் வழக்குப்பதிந்து தொழிற்சாலை உரிமையாளர் ராமதாஸ், விபத்தில் இருந்து தப்பிய மற்ற தொழிலாளர்களிடம் விசாரித்து வருகின்றனர்.

* உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம்: முதல்வர்

முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், மயிலாடுதுறை தில்லையாடி கிராமத்தில் செயல்பட்டு வந்த தனியாருக்கு சொந்தமான பட்டாசு கடையில் நேற்று மதியம் வெடிகளை பார்சல் செய்யும்போது எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட விபத்தில், கிடங்கல் கிராமத்தை சேர்ந்த மாணிக்கம், மயிலாடுதுறையை சேர்ந்த மதன், மகேஷ், ராகவன் ஆகிய 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினை கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன். இந்த விபத்தில் காயமடைந்து மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 4 பேருக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கவும் அறிவுறுத்தியுள்ளேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

* குடோனில் வெடிக்காத வெடிகள் செயல் இழப்பு

இந்த விபத்தில் 3 குடோன்களில் இரண்டு குடோன்கள் தரைமட்டமாகின. மயிலாடுதுறை தீயணைப்பு நிலைய வீரர்கள், மீதமிருந்த ஒரு குடோனில் வைக்கப்பட்டிருந்த வெடிக்காத வெடிகளை உடனடியாக செயல் இழக்க செய்தனர். முன்னதாக வெடிவிபத்து நடந்த குடோனுக்கு செல்லும் பாதை சிறியதாக இருந்ததால் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தீயணைப்பு வாகனம் வர தாமதமானது.

* 20 வீடுகளில் விரிசல்

தொழிற்சாலையில் வெடி விபத்து ஏற்பட்ட சத்தம் 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தரங்கம்பாடி, பொறையார் வரை எதிரொலித்துள்ளது. பொறையார் கடைவீதியில் இந்த வெடி சத்தத்தின் அதிர்வு ஏற்பட்டதாகவும், இதனால் தில்லையாடி பகுதியை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட வீடுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் கிராம மக்கள் தெரிவித்தனர்.

 

The post மயிலாடுதுறை அருகே தொழிற்சாலையில் நாட்டு வெடிகள் வெடித்து 4 தொழிலாளர்கள் பலி: 4 பேர் படுகாயம் appeared first on Dinakaran.

Related Stories: