ஆன்லைன் சூதாட்ட செயலி தொடர்பான வழக்கில் பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூருக்கு அமலாக்கத்துறை சம்மன்

டெல்லி: ஆன்லைன் சூதாட்ட செயலி தொடர்பான வழக்கில் பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. அக்.6ம் தேதி நடிகர் ரன்பீர் கபூர் விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது.

சமீபத்தில் சூதாட்ட மொபைல் ஆப் நிர்வாகம் ஒன்று பணமோசடி செய்தது தொடர்பாக, அமலாக்கப் பிரிவு மும்பை, டெல்லி உட்பட நாட்டின் பல இடங்களில் ரெய்டு நடத்தியது. சவுரப் சந்திராகர் என்பவர், தன்னுடைய கூட்டாளியுடன் சேர்ந்து இந்த சூதாட்ட மொபைல் ஆப்பை துபாயில் உருவாக்கி, இந்தியா மற்றும் பாகிஸ்தானில் இயக்கி வந்தனர்.

சவுரப் துபாயில் நடந்த தனது திருமணத்திற்கு 200 கோடி ரூபாய் செலவு செய்தார். அதனை தொடர்ந்து அமலாக்கப் பிரிவின் கண்காணிப்பின்கீழ் இந்த மொபைல் ஆப் வந்தது. இந்தத் திருமணத்தில் பாலிவுட் பிரபலங்கள் டைகர் ஷெராஃப், சன்னி லியோன், நேகா கக்கர் உட்பட பலர் கலந்துகொண்டனர். மொபைல் ஆப்பின் நிகழ்ச்சிகளிலும் நடிகர்கள் பங்கேற்றுள்ளனர். திருமணத்திற்கான பணம் ஹவாலா முறையில் செலவு செய்யப்பட்டது.

பாலிவுட் பிரபலங்கள் மற்றும் இந்தியாவிலிருந்து உறவினர்களை அழைத்துச் செல்ல விமானக் கட்டணம் மட்டும் 42 கோடி செலவிடப்பட்டிருக்கிறது. துபாயில் நடக்கவிருந்த மொபைல் ஆப் வெற்றி விழாவில் பங்கேற்பதற்காக பாலிவுட் பிரபலங்கள் பலருக்கு முன்பணமும் கொடுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், இந்த மொபைல் ஆப் தொடர்பாக நடிகர் ரன்பீர் கபூருக்கு அமலாக்கப் பிரிவு சம்மன் அனுப்பியிருக்கிறது.

ரன்பீர் கபூர் சூதாட்ட மொபைல் ஆப் விளம்பரங்களில் நடித்துள்ளார். இதற்காக அவருக்குப் பணம் எப்படி கொடுக்கப்பட்டது என்பது தொடர்பாக விசாரிக்க, வரும் 6-ம் தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மனில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ரன்பீர் கபூரைத் தொடர்ந்து மேலும் பல பாலிவுட் பிரபலங்களுக்கு அமலாக்கப் பிரிவு சம்மன் அனுப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

The post ஆன்லைன் சூதாட்ட செயலி தொடர்பான வழக்கில் பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூருக்கு அமலாக்கத்துறை சம்மன் appeared first on Dinakaran.

Related Stories: