சென்னை: உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பதற்காக இந்திய அணி சென்னை வந்தது. உலகம் முழுவதும் மிகவும் ஆர்வத்துடன் எதிர்பார்க்கக்கூடிய உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி நாளை துவங்குகிறது. இந்தியாவில் நடைபெறும் இந்த போட்டியை காண்பதற்காக இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். நாளை தொடங்கும் போட்டியானது நவம்பர் 19ம் தேதி வரை நடைபெறவுள்ளது. நாளை நடைபெறவுள்ள முதல் போட்டியில், நியூசிலாந்து – இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.
இதை தொடர்ந்து வரும் 8ம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெற உள்ள போட்டியில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. இந்நிலையில் இந்த போட்டியில் பங்கேற்பதற்காக இந்திய அணி வீரர்கள் சென்னை வந்தனர். சென்னை வந்த இந்திய, ஆஸ்திரேலிய அணி வீரர்களுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு திரண்டுள்ள விமான நிலைய ஊழியர்கள் மற்றும் ரசிகர்கள் வீரர்களிடம் கையெடுத்து வாங்கியும், புகைப்படம் எடுத்தும் மகிழ்ந்தனர். ரோகித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி சென்னை வந்து சேர்ந்தது.
சென்னை சேப்பாக்கத்தில் அக்டோபர் 8ம் தேதி நடைபெறும் போட்டியில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. ரோகித் ஷர்மா, விராட்கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், அஸ்வின், சுப்மன் கில், ஹர்திக் பாண்டியா, ஜடேஜா உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். ஷர்துல் தாக்கூர், இசான் கிஷன், கே.எல்.ராகுல், பும்ரா, குல்தீப் யாதவ், முகமது ஷமி, முகமது சிராஜ் ஆகியோரும் வருகை தந்தனர். உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வெல்வதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளதென்று கிரிக்கெட் வர்ணனையாளர்கள் பலரும் தெரிவித்துள்ளனர்.
The post உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பதற்காக சென்னை வந்தது இந்திய அணி; ரசிகர்கள் உற்சாக வரவேற்பு..!! appeared first on Dinakaran.
