சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வடகிழக்குப் பருவமழை முன்னேற்பாடுப் பணிகள் குறித்து மேயர் பிரியா தலைமையில் ஆலோசனைக்கூட்டம்

சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வடகிழக்குப் பருவமழை முன்னேற்பாடுப் பணிகள் குறித்து தொடர்புடைய சேவைத் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக்கூட்டம் மேயர் ஆர்.பிரியா தலைமையில் இன்று (03.10.2023) ரிப்பன் கட்டட வளாகக் கூட்டரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சியின் பேரிடர் மேலாண்மை கையேட்டினை மேயர் வெளியிட்டார்.

இக்கூட்டத்தில் பெருநகர சென்னை மாநகராட்சி, நீர்வளத்துறை, நெடுஞ்சாலைத்துறை, சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம், தமிழ்நாடு மின்சார வாரியம், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் ஆகியவற்றின் சார்பில் நடைபெற்று வரும் பணிகளின் தற்போதைய நிலை குறித்தும், பருவமழைக்கு முன்னதாக அவ்விடங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. மேலும், தென்னக இரயில்வே, தேசிய நெடுஞ்சாலைத்துறை, காவல் துறை, தீயணைப்புத் துறை, மீன்வளத்துறை, தேசிய பேரிடர் மீட்புப் படை, பி.எஸ்.என்.எல்., சென்னை மாநகரப் போக்குவரத்து, வேளாண்பொறியியல் துறை, தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம், தமிழ்நாடு நுகர்ப்பொருள் வாணிபக் கழகம், கடலோரக் காவல் படை, சென்னை வானிலை ஆய்வு மையம் மற்றும் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படை, ஆகியவற்றின் சார்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில், மேயர் அலுவலர்களுடன் பேசும்போது தெரிவித்ததாவது.
பெருநகர சென்னை மாநகராட்சி தமிழ்நாடு முதலமைச்சரால் சென்னையில் நிரந்தர வெள்ளத் தடுப்பு திட்டங்களை மேற்கொள்ள நியமிக்கப்பட்ட சென்னை வெள்ள மேலாண்மைக் குழுவின் பரிந்துரைகளின்படி நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை பருவமழைக்கு முன்னதாக விரைந்து முடித்து, சாலை சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ளவும், பணிகள் நடைபெறும் இடங்களில் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தடுப்புகள் அமைத்து பணிகளை மேற்கொள்ள வேண்டும். மழைநீர் வடிகால்களில் நடைபெற்று தூர்வாரும் பணிகளை விரைந்து முடிக்கவும், வடிகால்களில் இருந்து அகற்றப்பட்ட வண்டல்களை சாலைகளில் தேக்கி வைக்காமல் உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்.

சுரங்கப்பாதைகளின் தொட்டிகளை தூர்வாரி தயார்நிலையில் வைத்திருக்கவும், சுரங்கப்பாதைகள் மற்றும் கடந்த காலங்களில் மழைநீர் தேங்கிய இடங்களில் மோட்டார் பம்புகளை தயார் நிலையில் வைக்கவும், சுரங்கப்பாதைகளில் நீரினை உடனடியாக வெளியேற்றும் வகையில் கூடுதலாக 41 மோட்டார் பம்புகள் தயார்நிலையில் வைத்திருக்கவும், மழையின் காரணமாக விழும் மரம் மற்றும் மரக்கிளைகளை அகற்றும் மர அறுவை இயந்திரங்களை பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு தயார் நிலையில் வைக்கவும், வாகனங்களில் பொருத்தப்பட்ட 2 மர அறுவை இயந்திரங்கள், பெட்ரோல் மூலம் இயங்கும் மர அறுவை இயந்திரங்கள், மின்சாரத்தால் இயங்கும் 8 மர அறுவை இயந்திரங்கள், இரவு நேரங்களில் விழும் மரங்களை அகற்றிடும் வகையில் இரவு நேரக் குழுக்கள் மற்றும் 18 நடமாடும் உயர்கோபுர மின்விளக்குகள் ஆகியவற்றை தயார்நிலையில் வைத்திருக்க வேண்டும். பருவமழையினை முன்னிட்டு, விழும் நிலையில் உள்ள 20,000 மரங்களின் கிளைகள் கத்தரித்து விடப்பட்டுள்ளது.

மழை வெள்ளத்தின் போது பொதுமக்களை பாதுகாப்பாக மீட்டு தங்க வைக்கக்கூடிய வகையில் மாநகராட்சி பள்ளிகள், சமுதாயக் கூடங்கள், கல்யாண மண்டபங்கள் என 169 நிவாரண மையங்கள் தயார் நிலையில் வைத்திடவும், மழைக்கால வியாதிகளுக்கு பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்க ஏதுவாக அமைக்கப்பட்டுள்ள 101 நடமாடும் மற்றும் நிலையான மருத்துவக் குழுக்கள் தயார்நிலையில் வைத்திருக்க வேண்டும். மேலும், மழைக்கால நோய்கள் பரவாமல் தடுக்கும் வகையில் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்வதோடு கொசு மருந்து, கொசுப்புகை மருந்துகள், பிளீச்சிங் பவுடர் ஆகியவற்றை போதுமான அளவிற்கு இருப்பு வைத்திருக்க வேண்டும்.

மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து மண்டலங்களிலும் மழைநீரை வெளியேற்ற 503 எண்ணிக்கையிலான மோட்டார் பம்புகளை தயார்நிலையில் வைத்திருக்கவும், தாழ்வான பகுதிகளாக கண்டறியப்பட்ட இடங்களில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள மீன்வளத்துறையின் சார்பில் படகுகள் தயார்நிலையில் வைத்திருக்கவும், நிவாரண மையங்கள் மற்றும் தாழ்வான பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு ஒரே நேரத்தில் 1500 நபர்களுக்கு உணவு தயாரித்து வழங்கும் வகையில் பொது சமையலறைகளை தயார்நிலையில் வைத்திருக்க வேண்டும். பெருநகர சென்னை மாநகராட்சியால் பராமரிக்கப்படும் 33 சிறு கால்வாய்களில் 4 ரொபோடிக் எஸ்கவேட்டர் இயந்திரங்கள் மூலம் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 2 பெரிய ஆம்பிபியன் இயந்திரங்கள் மற்றும் 3 சிறிய ஆம்பிபியன் இயந்திரங்கள் மூலம் ஆறுகள் மற்றும் கால்வாய்களில் தூர்வாருதல் மற்றும் ஆகாயத்தாமரைகள் அகற்றும் பணிகளை மேற்கொண்டு மழைநீர் தங்குதடையின்றி செல்லும் வழிவகை செய்ய வேண்டும்.

நீர்வளத்துறை
எண்ணூர், நேப்பியர் பாலம், அடையாறு மற்றும் முட்டுக்காடு ஆகிய கழிமுகத் துவாரங்களில் பொக்லைன் இயந்திரங்களை தயார் நிலையில் வைக்கவும், மழைநீர் எளிதில் கடலில் கலக்கும் வகையில் கழிமுகப் பகுதிகளை அகலப்படுத்த வேண்டும். பருவமழைக்கு முன்னதாக சென்னைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள 15 நீர்வழிக் கால்வாய்களில் நீர்வளத்துறையால் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். வெள்ளத்தடுப்பு பணிகளை மேற்கொள்ளத் தேவையான மணல் மூட்டைகளை தயார்நிலையில் வைக்கவும், மாநகராட்சி ரிப்பன் கட்டடத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் பொறுப்பு அலுவலரை நியமித்து கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும்.

நெடுஞ்சாலைத்துறை
நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளையும், நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் பராமரிக்கப்படும் பாலங்கள், சிறு பாலங்களில் மழைநீர் தேங்காமல் வெளியேற ஏதுவாக தேவையற்ற திடக்கழிவுகள், செடி, கொடிகள் போன்றவற்றை அகற்றிடவும், தேவையான எண்ணிக்கையில் நீரிறைக்கும் மோட்டார் பம்புகளை தயார்நிலையில் வைக்கவும், விழும் நிலையில் உள்ள மரங்களின் கிளைகளை அப்புறப்படுத்திடவும், பழுதடைந்த சாலைகளை சீரமைத்து, குண்டும் குழியுமான சாலைகளை சீரமைத்திட வேண்டும்.

சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம்
கழிவுநீரேற்று நிலையங்களில் ஜெனரேட்டர்களை தயார்நிலையில் வைத்திருக்கவும், ஜெட்ராடிங், ஜெட்டிங் கம் சக்‌ஷன், சூப்பர் சக்கர் மற்றும் தூர்வாரும் இயந்திரங்களை தயார்நிலையில் வைத்திருக்க வேண்டும். நிவாரண மையங்களுக்கு மழைக்காலங்களில் குடிநீர் வழங்க வேண்டும். விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவு சரியான நிலையில் இருக்க வேண்டும். கழிவுநீர் கால்வாய்களின் நுழைவு வாயில்கள் சரியான முறையில் பராமரிக்கப்பட வேண்டும். கழிவுநீரேற்று நிலையங்களில் உள்ள பம்புகள் பராமரிக்கப்பட்டு 24 மணிநேரமும் இயங்கும் வகையில் இருக்க வேண்டும்.

மின்சார வாரியம்
சென்னையில் மின்சார வாரியத்தின் சார்பில் நடைபெற்று வரும் புதைவடப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். மழைக்காலங்களில் ஏற்படும் மின்தடைகளை உடனடியாக சீர்செய்ய 24 மணிநேரமும் பணியாளர்கள் தயாராக இருக்க வேண்டும். தாழ்வான பகுதிகளில் உள்ள மின்சாரப் பெட்டிகள் உயரம் அதிகரிக்கப்பட்டுள்ளதை உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், தேசிய நெடுஞ்சாலைத்துறை, தீயணைப்புத்துறை, மீன்வளத்துறை, கூட்டுறவுத் துறை, மாநகரப் போக்குவரத்து போன்ற சேவை துறைகள் பருவமழையின் போது ஏற்படும் பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை பாதுகாக்க தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் துறைவாரியாக மேற்கொள்ள வேண்டும்.

கடலோர காவல்படை, தேசிய பேரிடர் மீட்புப்படை, மற்றும் மாநிலப் பேரிடர் மீட்புப்படை மழைவெள்ள பாதிப்புகள் ஏற்படும் நேரத்தில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளை மாநகராட்சி மற்றும் இதர சேவை துறைகளுடன் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

இக்கூட்டத்தில், துணை மேயர் மு.மகேஷ்குமார், கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., கூடுதல் ஆணையாளர் (வருவாய் (ம) நிதி) ஆர்.லலிதா, இ.ஆ.ப., இணை ஆணையாளர் (பணிகள்) டாக்டர் ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப., துணை ஆணையாளர்கள் ஷரண்யா அறி, இ.ஆ.ப., (கல்வி), எம்.சிவகுரு பிரபாகரன், இ.ஆ.ப., (வடக்கு வட்டாரம்), எஸ்.ஷேக் அப்துல் ரஹ்மான், இ.ஆ.ப., (மத்திய வட்டாரம்), எம்.பி.அமித், இ.ஆ.ப., (தெற்கு வட்டாரம்), வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன், பெருநகர சென்னை மாநகராட்சி தலைமைப் பொறியாளர்கள், சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியம், நெடுஞ்சாலைத்துறை, தமிழ்நாடு மின்சார வாரியம், தென்னக இரயில்வே, சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், காவல்துறை, தீயணைப்புத் துறை, தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு, பி.எஸ்.என்.எல்., உணவு வழங்கல் மற்றும் கூட்டுறவுத் துறை, கடலோரக் காவல் படை, சென்னை வானிலை ஆய்வு மையம் உள்ளிட்ட பிற சேவைத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வடகிழக்குப் பருவமழை முன்னேற்பாடுப் பணிகள் குறித்து மேயர் பிரியா தலைமையில் ஆலோசனைக்கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: