500 நாட்களாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை.. 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு விலை குறைக்கப்படுமா?!!

சென்னை : சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் 500வது நாளாக  தொடர்ந்து ஒரே விலையில் பெட்ரோல், டீசல் விலை நீடிக்கிறது. சர்வதேச கச்சா எண்ணெய் விலை நிலவரத்தின் அடிப்படையில் எண்ணெய் நிறுவனங்களே பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்கின்றன. இதற்கு நாட்டில் தொடர்ந்து கடும் எதிர்ப்பு உள்ளது. இதன் உச்சமாக கடந்த 2021ம் ஆண்டு பெட்ரோல், டீசல் விலை ரூ100ஐ தாண்டி விற்பனையானது. 1 லிட்டர் பெட்ரோல் விலை ரூ110க்கும் அதிகமாக விற்பனை செய்யப்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிரான போராட்டங்களும் நடத்தப்பட்டன.

இதன் பின்னர் உயர்த்தப்பட்ட பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியில் ஒரு பகுதியை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு 2 முறை குறைத்தது. கடந்த மே மாதம் உயர்த்தப்பட்ட பெட்ரோல் மீதான கலால் வரியில் ரூ 9.50; டீசல் விலையில் ரூ 7 என குறைத்தது மத்திய பாஜக அரசு. இதையடுத்து பெட்ரோல், டீசல் விலையில் எந்த விதமான மாற்றமும் ஏற்படவில்லை. 500 நாட்களாக அதே விலையில் நீடிக்கிறது. தற்போதைய நிலவரப்படி சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 102.63க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ. 94.24 க்கும் விற்பனையாகி வருகிறது. ஆனாலும் எப்போது பெட்ரோல், டீசல் விலை குறையும் என்பதுதான் பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்….

கச்சா எண்ணெய் vs பெட்ரோல், டீசல் விலை!!

500 நாட்களுக்கு முன்பு 2022 மே 20ம் தேதி கச்சா எண்ணெய் விலை 113 டாலராக இருந்தது.113 டாலரில் இருந்து இந்த ஆண்டு மே 4ல் மிக குறைந்து 63 டாலராக விற்ற போதும் பெட்ரோல் விலை குறைக்கப்படவில்லை.2022 செப்டம்பருக்கு பின் கச்சா எண்ணெய் விலை 9- டாலருக்கு கீழ் குறைந்த போதும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படவில்லை.கடந்த ஓராண்டாக கச்சா எண்ணெய் விலை 90 டாலருக்கும் கீழ் உள்ளது. இதனிடையே நடக்க உள்ள 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு விலை குறைக்கப்படுமா என மக்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.

The post 500 நாட்களாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை.. 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு விலை குறைக்கப்படுமா?!! appeared first on Dinakaran.

Related Stories: