திருத்தணி, அக். 2: திருத்தணி மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் நாள்தோறும் காலை முதல் மாலை வரை கடுமையாக சுட்டெரிக்கும் வெயில் பொதுமக்களை வாட்டி வதைக்கிறது. அதே நேரத்தில் மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக திருத்தணி திருவலங்காடு திருத்தணி நகரம் ஆர்.கே. பேட்டை பள்ளிப்பட்டு பொதட்டூர்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் ஏராளமான பொதுமக்கள் காய்ச்சலால் பாதிப்படைந்துள்ளனர். இதனால் அருகாமையில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நாள்தோறும் 500க்கும் மேற்பட்டோர் காய்ச்சலால் பாதிப்படைந்து மருத்துவமனையில் குவிகின்றனர்.
இந்த காய்ச்சலுக்கு குழந்தைகள் முதல் முதியோர்கள் வரை என அனைவரையும் பாதிப்படைய செய்துள்ளது. பொதுவாக தற்போது காய்ச்சல் ஏற்பட்டுள்ள நபர்களுக்கு ரத்த அணுக்கள் குறைவாக உள்ளன. இதனால் பலரும் டெங்கு போன்ற பல்வேறு காய்ச்சலில் பாதிப்படைந்து இருப்பதால் மருத்துவமனைகளில் நிரம்பி வருகின்றன. திருத்தணி அரசு பொது மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் பற்றாக்குறை காரணமாக மருத்துவர்கள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
எனவே திருத்தணி அரசு பொது மருத்துவமனையில் நாள் ஒன்றுக்கு குறைந்தது 100 முதல் 200 பேர் காய்ச்சலால் மருத்துவமனைக்கு வருகின்றனர். அதில் 50க்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்படுகின்றனர். இதனால் மருத்துவமனையில் போதிய படுக்கை வசதி இல்லாத காரணத்தால் நோயாளிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே உடனடியாக நோய் தடுப்பு பணிகளை மாவட்ட நிர்வாகம் எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.
The post திருத்தணியில் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் குவியும் நோயாளிகள்: டாக்டர்கள் பற்றாக்குறையால் அவதி appeared first on Dinakaran.
