மபி சட்டசபை தேர்தலில் அமைச்சர் யசோதரா போட்டியிட மறுப்பு: ஜோதிராதித்யா சிந்தியாவை களமிறக்குகிறதா பா.ஜ?

போபால்: மத்தியபிரதேச சட்டப்பேரவை தேர்தலில் தற்போதைய அமைச்சர் யசோதரா போட்டியிட மறுத்துவிட்டார். அதனால் அவரது மருமகனும், ஒன்றிய அமைச்சருமான ஜோதிராதித்யா சிந்தியா களமிறக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. மத்தியபிரதேச சட்டப் பேரவைக்கு இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு பா.ஜ ஆட்சி நடக்கிறது. முதல்வராக சிவராஜ்சிங் சவுகான் உள்ளார். தேர்தல்தேதி அறிவிக்கும் முன்பே பா.ஜ இதுவரை 79 தொகுதிக்கு வேட்பாளர் பட்டியலை அறிவித்து விட்டது. ஒன்றிய அமைச்சர்கள் நரேந்திர தோமர், பிரஹலாத் படேல், பக்கன் குலாஸ்தே மற்றும் பா.ஜ தேசிய பொதுச் செயலாளர் கைலாஷ் விஜயவர்கியா ஆகியோரும் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். ஆனால் முதல்வர் சிவ்ராஜ்சிங் சவுகான் பெயர் பட்டியலில் இல்லை. அவர் ஓரங்கட்டப்படுகிறாரா என்ற கேள்வி தற்போது மபி அரசியலில் புயலை கிளப்பி உள்ளது.

இந்தநிலையில் ஷிவ்புரி தொகுதியில் 4 முறை பா.ஜ சார்பில் எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டவரும், தற்போதைய பா.ஜ அமைச்சருமான யசோதரா ராஜே சிந்தியா இந்த முறை சட்டசபை தேர்தலில் போட்டியிட விருப்பம் இல்லை என்று தெரிவித்து விட்டார். கொரோனா தொற்று பரவியபிறகு இதுவரை 4 முறை தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பதால் உடல்நிலையை காரணம் காட்டி இந்த தேர்தலில் போட்டியிடவில்லை என்று பா.ஜ மேலிடத்திற்கு கடிதம் எழுதியுள்ளார். இதை மபி மாநில பாஜக தலைவர் வி.டி.சர்மா உறுதிப்படுத்தி உள்ளார்.

அவர் கூறுகையில்,‘யசோதரா எங்கள் மூத்த மற்றும் மரியாதைக்குரிய தலைவர். அவர் உடல்நலக் காரணங்களால் தேர்தலில் போட்டியிட விருப்பமில்லை என்று மூன்று மாதங்களுக்கு முன்பே கட்சிக்கு தெரிவித்திருந்தார்’என்றார்.
இதையடுத்து அவரது ஷிவ்புரி சட்டப்பேரவை தொகுதியில் ஒன்றிய அமைச்சரும், அவரது மருமகனுமான ஜோதிராதித்யா சிந்தியா போட்டியிடலாம் என்ற கருத்து பா.ஜவில் எழுந்துள்ளது. மேலும் ஷிவ்புரி தொகுதியில் ஜோதிராதித்யா போட்டியிடாவிட்டாலும் குணா மக்களவை தொகுதியில் உள்ள பாமோரி அல்லது கோலாரஸ் சட்டசபை தொகுதியில் அவர் பா.ஜ வேட்பாளராக களம் இறக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

* பா.ஜ மீண்டும் ஆட்சிக்கு வந்தால் வீட்டுக்கு ஒருவருக்கு வேலை
மத்தியப்பிரதேசத்தில் பாஜ மீண்டும் ஆட்சிக்கு வந்தால் வீட்டுக்கு ஒருவருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார். அலிராஜ்பூர் மாவட்டத்தில் நடந்த பேரணியில் கலந்து கொண்டு பேசிய முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் கூறுகையில்,‘‘மாநில மக்களின் வாழ்க்கையில் இருக்கும் கஷ்டங்களை நான் அகற்றி விடுவேன். பாஜ மீண்டும் ஆட்சி அமைத்தால் ஒவ்வொரு வீட்டிலும் ஒருவருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும். சுய உதவி குழு, உதயம் கிராந்தி யோஜனா அல்லது அரசு வேலைவாய்ப்பு என குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்கப்படும்” என்றார்.

The post மபி சட்டசபை தேர்தலில் அமைச்சர் யசோதரா போட்டியிட மறுப்பு: ஜோதிராதித்யா சிந்தியாவை களமிறக்குகிறதா பா.ஜ? appeared first on Dinakaran.

Related Stories: