காலிஸ்தான் ஆதரவாளர்கள் அடாவடி ஸ்காட்லாந்து குருத்வாராவிற்குள் இந்திய தூதர் நுழைய தடை

லண்டன்: ஸ்காட்லாந்தில் உள்ள சீக்கிய குருத்வாராவிற்குள் இந்திய தூதர் நுழையவிடாமல் காலிஸ்தான் ஆதரவாளர்கள் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இங்கிலாந்துக்கான இந்திய தூதர் விக்ரம் துரைசாமி ஸ்காட்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் கிளாஸ்கோவில் உள்ள குருத்வாராவிற்கு செல்வதற்கு விக்ரம் துரைசாமி திட்டமிட்டு இருந்தார்.இதனை தொடர்ந்து அவர் குருத்வாராவிற்குள் நுழைய முயன்றார். ஆனால் அங்கு இருந்த காலிஸ்தான் ஆதரவாளர்கள் சிலர் அவரை குருத்வாராவிற்குள் நுழைய விடாமல் தடுத்து நிறுத்தினார்கள். இதனால் அவர் திரும்பி சென்றார். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து ஸ்காட்லாந்து போலீஸ் செய்தி தொடர்பாளர் கூறுகையில்,‘‘ குருத்வாராவில் இடையூறு ஏற்பட்டதாக புகார் வந்தது. ஆனால் காயமடைந்தது குறித்து எந்த தகவலும் இல்லை. விசாரணை நடந்து வருகின்றது” என்றார்.

இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் கூறுகையில்,‘‘சீக்கிய குழுக்களை சந்தித்து தூதரகம் மற்றும் பிற விஷயங்களில் அவர்களின் கவலைகளை நிவர்த்தி செய்யும் வகையில் குருத்வாரா கமிட்டியின் கோரிக்கையின்பேரில் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஆனால் ஒரு சில வெளியாட்கள் மற்றும் பிரிவினைவாத பிரிவுகளை சேர்ந்தவர்கள் இதற்கு இடையூறு ஏற்படுத்தினார்கள்” என தெரிவித்துள்ளனர். காலிஸ்தான் பிரிவினைவாதி நிஜ்ஜார் சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பாக இந்தியா-கனடா இடையே மோதல் மற்றும் பதற்றமான சூழல் நிலவி வருகின்றது. இந்நிலையில் ஸ்காட்லாந்து குருத்வாராவிற்குள் இந்திய தூதரை நுழைய விடாமல் தடுத்த சம்பவம் அரங்கேறி உள்ளது புதிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post காலிஸ்தான் ஆதரவாளர்கள் அடாவடி ஸ்காட்லாந்து குருத்வாராவிற்குள் இந்திய தூதர் நுழைய தடை appeared first on Dinakaran.

Related Stories: