இதேபோல் இந்துக்களுக்கு எதிரான சம்பவங்கள் கனடாவில் அதிகரித்து வந்தது. இதன் பின்னணியில் காலிஸ்தான் ஆதரவு பிரிவினைவாதிகள் இருப்பது தெரிய வந்தது. இந்தநிலையில் கனடாவை சேர்ந்த காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஜுன் 18ம் தேதி மர்மநபர்களால் சுட்டு கொல்லப்பட்டார். இந்த கொலை தொடர்பாக கனடா அரசு விசாரணை நடத்தி வந்தது. இதற்கிடையே டெல்லியில் செப்டம்பர் 9,10 ம் தேதிகளில் நடந்த ஜி20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்தியா வந்திருந்தார்.
அப்போது இந்திய தூதரகம், இந்து கோயில்களின் மீது தொடரும் காலிஸ்தான் பிரிவினைவாதிகளின் தாக்குதல் செயல்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்த பிரதமர் மோடி, வன்முறைகளுக்கு எதிராக கனடா அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜஸ்டின் ட்ரூடோவிடம் வலியுறுத்தினார். ஜி20 பயணத்தை முடித்துவிட்டு கனடா திரும்பிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, அங்கு நடந்த காலிஸ்தான் பிரிவினைவாதி நிஜ்ஜார் கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு உள்ளதாக கனடா நாடாளுமன்றத்தில் பகிரங்கமாக குற்றம்சாட்டினார். மேலும் கனடாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரியை நாட்டை விட்டு வௌியேறவும் கனடா அறிவுறுத்தியது.
இதனால் இருநாடுகளுக்கும் இடையே பிரச்னை உருவானது. இதைத்தொடர்ந்து இந்தியாவில் உள்ள கனடா தூதரை வௌியேறும்படி இந்தியா உத்தரவிட்டது. மேலும் கனடா நாட்டினருக்கான இந்தியா விசாவும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்தியா, கனடா உறவில் நீண்ட விரிசல் ஏற்பட்டுள்ளது. கனடாவில் வசிக்கும் இந்தியர்கள் குறிப்பாக இந்துக்கள் கனடாவை விட்டு வௌியேற வேண்டும் என சீக்கியர்களுக்கான நீதி அமைப்பு எச்சரிக்கை விடுத்தது. அமெரிக்காவில் சுற்று பயணம் மேற்கொண்டுள்ள ஒன்றிய வௌியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் அமெரிக்க வௌியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கனை சந்தித்து பேசினார்.
அப்போது அமெரிக்க வௌியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர், “காலிஸ்தான் தீவிரவாதி நிஜ்ஜார் கொல்லப்பட்ட விவகாரத்தில் கனடாவின் விசாரணைக்கு இந்தியா முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்துகிறது” என்று தெரிவித்தார். இதற்கு பதிலளித்து நேற்று வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கனடாவில் இந்திய தூதர்களை மிரட்டுவது, இந்திய தூதரகம் மீது புகைக்குண்டு வீசுவதை ஏற்க முடியாது என்று காட்டமாக விமர்சனம் செய்தார்.
இதுதொடர்பாக அவர் நேற்று கூறியதாவது: கனடா அரசுடன் கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவிற்கு தொடர்ந்து பிரச்னை நிலவி வருகின்றது. தீவிரவாதம் மற்றும் வன்முறைக்கு அனுமதி அளிப்பதை சுற்றியே தற்போதைய பிரச்னை உள்ளது. சில முக்கியமான நாடு கடத்தல் கோரிக்கைகளுக்கு கனடா அரசு சார்பில் பதிலளிக்கப்படவில்லை. தூதரகங்கள் மீது புகைகுண்டு வீசப்பட்டுள்ளது. அங்குள்ள எங்கள் தூதரகத்தின் முன் புகை குண்டுகளை வீசியுள்ளனர். எங்கள் தூதரகங்களுக்கு முன்னால் வன்முறையை நடத்தியுள்ளனர். போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
இதை சாதாரணமாக நீங்கள் கருதுகிறீர்களா? வேறு எந்த நாட்டிலும் இது நடந்திருந்தால், அவர்கள் எப்படி நடந்துகொள்வார்கள்? கனடாவில் நடக்கும் எதையும் சாதாரணமாக்க வேண்டாம்? கனடாவில் என்ன நடக்கிறது என்பதை வெளியே கூறுவது முக்கியம். கனடாவில் நடப்பது போன்று அமெரிக்கா தூதரகம் முன்பு நடந்திருந்தால், அமெரிக்கா அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? பேச்சு சுதந்திரம் என்ற பெயரில் தூதர்களை மிரட்டுவதை ஏற்க முடியாது. பேச்சு சுதந்திரம் என்றால் என்ன என்பதை நாம் மற்றவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டியதில்லை. இதுபோன்ற சம்பவங்கள் அமெரிக்காவில் நடந்து இருந்தால் அவர்கள் எப்படி நடந்துகொள்வார்கள்?. தாக்கப்பட்டது உங்கள் தூதர்கள், உங்கள் தூதரகங்கள், உங்கள் மக்கள் என்றால், உங்கள் எதிர்வினை என்னவாக இருக்கும்?. முழு விவாதமும் பிரச்சினை ஒன்றின் மீது மட்டும் கவனம் செலுத்தக்கூடாது. இது சில காலமாக நடந்து வருகிறது. இது மிகவும் தீவிரமான விஷயம். இவ்வாறு அவர் கூறினார்.
* கனடாவில் வசிக்கும் சீக்கியர்களில் காலிஸ்தான் பிரிவினைவாதத்தை ஆதரிப்பவர்கள் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கையை மேற்கொள்வதாக அடிக்கடி இந்தியா புகார் தெரிவித்து வந்துள்ளது.
* கனடாவில் வசித்து வந்த ஹர்தீப் சிங் நிஜ்ஜாரை 2020ல் இந்தியா பயங்கரவாதியாக அறிவித்தது.
* ஜூன் 18 அன்று கனடாவில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியாவில் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டார்.
* செப்டம்பர் 21 அன்று முதல் கனடா மக்களுக்கு இந்தியா விசா வழங்குவது நிறுத்தப்பட்டது.
The post காலிஸ்தான் பிரிவினைவாத தலைவன் கொலையால் மோதல் தீவிரம் கனடாவுக்கு இந்தியா பகிரங்க எச்சரிக்கை: தூதர்களை மிரட்டுவது, புகை குண்டு வீசுவதை ஏற்க முடியாது; ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கர் அமெரிக்காவில் திட்டவட்டம் appeared first on Dinakaran.