சென்னை: எய்ம்ஸ் கட்டுமானப் பணியை தாமதப்படுத்தி தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சிக்கும் ஒன்றிய அரசுக்கு நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தென் தமிழக மக்கள் பலன் அடையும் வகையில், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வேண்டும் என மக்கள் போராடிய நிலையில், 2015ம் ஆண்டு அப்போதைய ஒன்றிய அமைச்சர் அருண்ஜெட்லி, மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என அறிவித்திருந்தார். தொடர்ந்து, 2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் நேரத்தில் பிரதமர் மோடி, மதுரை தோப்பூரில் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார். சர்வதேச தரத்தில் மருத்துவ சிகிச்சை கிடைக்கும் என தென் மாவட்ட மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
ஆனால், 2024ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் நெருங்கிவிட்ட போதிலும் ‘எய்ம்ஸ்’ இன்னும் தொடங்கப்படவில்லை. கட்டுமானப் பணியே தொடங்காத மதுரை ‘எய்ம்ஸ்’ மருத்துவமனைக்கு குழு அமைத்து கூட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு தேர்தல் நேரத்திலும் மதுரை ‘எய்ம்ஸ்’ திட்டத்தை வைத்து கட்சியினர் அரசியல் செய்து வருகின்றனர். 8 ஆண்டுகள் முடிந்த நிலையில் ‘எய்ம்ஸ்’க்கு ஒதுக்கிய இடம் புதர் மண்டிக்கிடக்கிறது. இதனிடையே, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதற்கான டெண்டரில் பங்கேற்கும் நிறுவனங்களுக்கு விண்ணப்ப கால அவகாசம் அக்டோபர் 6ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இதுகுறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் பக்க செய்தியில், மருத்துவமனையின் கட்டுமானப் பணிக்கான முன் டெண்டரில் பங்கேற்கும் நிறுவனங்களுக்கான விண்ணப்ப கால அவகாசத்தை மூன்றாவது முறையாக நீட்டித்துள்ளது ஒன்றிய அரசு. ஒன்றிய அரசு ஒற்றை செங்கலை வைத்து நான்கு ஆண்டுகள் கடந்த பிறகும் கட்டுமானப் பணிக்காக முன் டெண்டருக்கே இத்தனை கால தாமதம் ஆகிறது என்றால் மருத்துவமனையை கட்டி முடிக்க இன்னும் எத்தனை ஆண்டுகளாகும்? என கேள்வி எழுப்பியுள்ளார். எய்ம்ஸ் கட்டுமானப் பணியை தாமதப்படுத்தி தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சிக்கும் ஒன்றிய அரசுக்கு வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் என்றும் அமைச்சர் உதயநிதி தெரிவித்திருக்கிறார்.
The post எய்ம்ஸ் கட்டுமானப் பணியை தாமதப்படுத்தி தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சிக்கும் ஒன்றிய அரசுக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்: அமைச்சர் உதயநிதி சாடல் appeared first on Dinakaran.
