அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை அக்.13 வரை நீட்டித்தது சென்னை முதன்மை அமர்வு கோர்ட்..!!

சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் மேலும் 14 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கடந்த ஜூன் 14ம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு தற்போது நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே இவர் மீது கடந்த ஆகஸ்ட் 12ம் தேதி குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுவிட்டது. அதற்கான நகலும் கொடுக்கப்பட்டுள்ளது. 2 முறை செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது.

கடந்த முறை வழக்கு விசாரணையின்போது செந்தில்பாலாஜி தரப்பில், சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்ததாக எந்த சாட்சிகளும் கூறவில்லை, வழக்கு பதியப்பட்ட ஆண்டிலிருந்து தற்போது வரை வருமான வரி செலுத்தியது வருமான வரித்துறையால் ஏற்கப்பட்டுள்ளது. அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக செந்தில்பாலாஜி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என வாதிட்டார். இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி அல்லி, ஜாமின் கோரிய அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனு மீது செப்டம்பர் 20ம் தேதி தீர்ப்பு வழங்குவதாக உத்தரவிட்டார்.

தொடர்ந்து, 6வது முறையாக கடந்த முறை நீட்டிக்கப்பட்ட செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலானது இன்றுடன் முடிவடைகிறது. இந்நிலையில், சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு புழல் சிறையில் இருந்து காணொலி காட்சி மூலம் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட்டார். இதனை பதிவு செய்துகொண்ட நீதிபதி, அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை மேலும் 14 நாட்களுக்கு நீட்டித்தார். அதன்படி, அக்.13ம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் செந்தில் பாலாஜியின் காவல் 7வது முறையாக நீட்டிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

The post அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை அக்.13 வரை நீட்டித்தது சென்னை முதன்மை அமர்வு கோர்ட்..!! appeared first on Dinakaran.

Related Stories: