காவிரி நீர் பங்கீடு தொடர்பாக காவிரி மேலாண்மை ஆணையத்தின் அவசரக் கூட்டம் டெல்லியில் தொடங்கியது..!!

டெல்லி: காவிரி நீர் பங்கீடு தொடர்பாக டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையக் குழு கூட்டம் தொடங்கியது. காவிரியில் கர்நாடகா நீர்திறக்க மறுப்பு தெரிவித்த நிலையில் காவிரி மேலாண்மை ஆணையம் அவசரக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது. ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தர், ஒழுங்காற்று குழுவின் தலைவர் வினீத் குப்தா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இந்த கூட்டத்தில் தமிழகம், கர்நாடகா மாநிலங்கள் தரப்பில் அரசு அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். தமிழ்நாடு சார்பில் நீர்வளத்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா, காவிரி தொழில்நுட்ப குழு தலைவர் சுப்பிரமணியன் பங்கேற்றுள்ளனர்.

தமிழ்நாட்டுக்கு காவிரியில் கர்நாடகா வினாடிக்கு 3,000 கனஅடி நீர் திறக்க காவிரி ஒழுங்காற்றுக்குழு ஏற்கனவே பரிந்துரைத்திருந்தது. 18 நாட்களுக்கு விநாடிக்கு 3,000 கனஅடி நீர் திறக்க பரிந்துரைத்திருந்த நிலையில் கர்நாடக அரசு மறுப்பு தெரிவித்தது. வறட்சி காரணமாக போதிய நீர் இல்லாததால் காவிரி நீர் திறக்க முடியாது என கர்நாடகா அரசு மறுத்திருந்தது. தற்போது நடைபெறும் அவசர கூட்டத்தில், காவிரி பாசன பகுதியில் பெய்த மழை நிலவரம், பிலிகுண்டுலுவில் குறைந்த அளவே நீர்வரத்து பற்றி விவாதிக்கப்பட உள்ளது.

காவிரியில் இருந்து வினாடிக்கு 12,500 கனஅடி நீர் திறக்க கூட்டத்தில் தமிழ்நாடு சார்பில் வலியுறுத்தப்பட உள்ளது. காவிரி ஒழுங்காற்று குழுவின் பரிந்துரையை ஆணையம் உறுதி செய்யுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஒழுங்காற்றுக் குழு பரிந்துரையின் பேரில் கர்நாடகா தண்ணீர் திறக்க மறுக்கும் நிலையில் அவசரக் கூட்டம் நடைபெற்று வருகிறது.

The post காவிரி நீர் பங்கீடு தொடர்பாக காவிரி மேலாண்மை ஆணையத்தின் அவசரக் கூட்டம் டெல்லியில் தொடங்கியது..!! appeared first on Dinakaran.

Related Stories: