புதுக்கோட்டை அருகே காரும், தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து; 3 பேர் உயிரிழப்பு..!!

புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே காரும் தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். புதுக்கோட்டை அடுத்த நமணசமுத்திரம் காவல் நிலையம் அருகே திருச்சி – ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் மதுரையில் இருந்து புதுக்கோட்டை நோக்கி பயணிகளை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்தும், அதேபோல் புதுக்கோட்டையில் இருந்து மதுரை நோக்கி சென்ற காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் பேருந்தின் முன்பக்கம் அப்பளம் போல் நொறுங்கியது. கார் ஓட்டுநர் உள்பட 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

ஒரு சிறுவன் உள்ளிட்ட 3 பேர் காரில் சிக்கி பேருந்திற்கு அடியில் சென்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற நமணசமுத்திரம் காவல்துறையினர், தீயணைப்புத்துறையினர் மற்றும் பொதுமக்கள், பேருந்தினை கவிழ்த்து அடியில் சிக்கிய காரை மீட்டனர். தொடர்ந்து மீட்கப்பட்ட 3 பேரும் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். உயிரிழந்த இருவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

திருச்சி – ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் இந்த கோர விபத்து நிகழ்ந்ததால் கிட்டத்தட்ட 1 மணி நேரத்திற்கும் மேலாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. காரில் பயணித்தது யார்?. கார் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து மீது மோதியதா? அல்லது பேருந்து கட்டுப்பாட்டை மீறி கார் மீது மோதியதா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post புதுக்கோட்டை அருகே காரும், தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து; 3 பேர் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: