கருவின் பாலினத்தை கண்டறிந்து கூறினால் குண்டாஸ் நடவடிக்கை கலெக்டர் எச்சரிக்கை

தர்மபுரி, செப்.29: சட்டவிரோதமாக கருவில் உள்ள சிசுக்களின் பாலினத்தை கண்டறிந்து கூறுபவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் சாந்தி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கலெக்டர் கூறியதாவது:
காரிமங்கலம் அருகே கிராம பகுதியில், ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் வீடு வாடகை எடுத்து, அங்கு சட்டவிரோதமாக ஸ்கேன் இயந்திரத்தை பயன்படுத்தி, இடைத்தரகர்கள் மூலம் அங்குள்ள கர்ப்பிணிகளுக்கு ஸ்கேன் பரிசோதனை செய்து, கருவில் உள்ள சிசுவின் பாலினத்தை சிலர் கண்டறிந்து தெரிவித்து வந்துள்ளனர்.

மருத்துவ நலப் பணிகள் துறையினர் தனிக்குழு அமைத்து, இது தொடர்பாக கண்காணிப்பு பணி மேற்கொண்டு, ரகசிய சோதனை நடத்தி கருவில் உள்ள சிசுவின் பாலினம் கண்டறிந்து கூறிய கும்பலை சேர்ந்த பெண் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஸ்கேன் மையங்கள், ஆண் குழந்தைகள் மட்டுமே பிறக்கும் சந்தேகத்திற்குரிய தனியார் மருத்துவமனைகளில், மருத்துவ குழுவினர் மூலம் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இது தொடர்பாக வட்டார மருத்துவ அலுவலர்கள், கிராம சுகாதார செவிலியர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. இத்தகைய சோதனைகள் மாவட்டத்தில் தொடர்ந்து நடத்தப்படும்.
பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள ஸ்கேன் மையங்களில், கருவில் உள்ள சிசுவின் பாலினம் கண்டறிந்து கூறும் சட்ட விரோத செயல் நடந்தால், அதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு உடனடியாக தகவல் தெரிவிக்கலாம். இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.

The post கருவின் பாலினத்தை கண்டறிந்து கூறினால் குண்டாஸ் நடவடிக்கை கலெக்டர் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: