நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத அதிகாரிகள் மீது குற்ற நடவடிக்கை: ஐகோர்ட் கிளை எச்சரிக்கை

மதுரை:கரூர் மாவட்டம் குளித்தலையைச் சேர்ந்த அமிர்தவள்ளி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், அரசு போக்குவரத்துக்கழகத்தில் பணியாற்றிய கணவர் இறந்ததையடுத்து பணப்பலன்கள், வாரிசு வேலை வழங்க நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை நிறைவேற்றாதவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பின் கீழ் நடவடிக்கை எடுக்க கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி பட்டு தேவானந்த் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. கும்பகோணம் கோட்ட மேலாண் இயக்குநர் மோகன், பொதுமேலாளர் இளங்கோவன் ஆகியோர் ஆஜராகி, நீதிமன்ற உத்தரவு நிறைவேற்றப்படும் என கூறினர். அப்போது நீதிபதி, ‘‘நீதிமன்றம் உத்தரவிட்டு 3 ஆண்டுக்கு மேலாகிவிட்டது. பணியாளர்களுக்கான பணப்பலன்கள் மற்றும் பதவி உயர்வை முறைப்படுத்த வேண்டும்.

நீதிமன்ற உத்தரவை அலுவலக உத்தரவு போல சில அதிகாரிகள் நினைக்கிறார்கள். நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற வேண்டிய இடத்தில் உள்ள அதிகாரிகளுக்கு, அந்த உத்தரவுகள் என்னவென்றே தெரியவில்லை. இதனை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத அதிகாரிகள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க நேரிடும்-’’ எனக் கூறி விசாரணையை தள்ளி வைத்தார்.

The post நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத அதிகாரிகள் மீது குற்ற நடவடிக்கை: ஐகோர்ட் கிளை எச்சரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: