மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பூண்டி ஏரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 3 ஆயிரம் கன அடியாக உயர்வு:  தற்போது 2,500 கன அடியாக தண்ணீர் திறப்பு  தரைப்பாலங்கள் மூழ்கியதால் போக்குவரத்து துண்டிப்பு

திருவள்ளூர், செப். 28: திருவள்ளூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் பூண்டி ஏரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 3 ஆயிரம் கன அடியாக உயர்ந்துள்ளது. இதில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தற்போது 2,500 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. கொசஸ்தலை ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் தரைப்பாலங்கள் தண்ணீரில் மூழ்கியதையடுத்து ஏராளமான கிராமங்களில் போக்குவத்து துண்டிக்கப்பட்டது. திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையின் காரணமாக மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகள் தொடர்ந்து நிரம்பி வருகின்றன. இதில் சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக இருப்பது பூண்டி சத்தியமூர்த்தி தேக்கமாகும். இந்த பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்திற்கு ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து திறந்து விடப்பட்ட கிருஷ்ணா நதிநீர், கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழைநீரின் வரத்து மற்றும் கால்வாய்கள் மூலம் பெறப்படும் நீர் என நீர்வரத்து 1,500 கன அடியில் இருந்து 3,000 கன அடியாக உயர்ந்துள்ளது. மேலும் நீர்மட்ட உயரம் 35 அடியில் தற்போது 34.25 அடி ஆகவும், மொத்த கொள்ளளவான 3,231 மில்லியன் கன அடியில் தற்போது நீர் இருப்பு 2,902 மில்லியன் கன அடியாகவும் உள்ளது.

இந்நிலையில் தொடர்ந்து நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக விரைவில் பூண்டி நீர்த்தேக்கம் தனது முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் அறிவுறுத்தலின் பேரில் அணையின் பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பூண்டி சத்தியமூர்த்தி நீர்தேக்கத்திலிருந்து நேற்று முன்தினம் வினாடிக்கு 1,000 கன அடி உபரி நீர் 2 மதகுகளின் வழியாக கொசஸ்தலை ஆற்றில் திறக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது பூண்டி ஏரிக்கு நீர்வரத்து 3,000 கன அடியாக உயர்ந்திருப்பதால் நேற்று காலை 9 மணியளவில் 2,500 கன அடி வீதம் மிகை நீர் திறக்கப்பட்டது. இதனால் நீர் வெளியேறும் கொசஸ்தலை ஆறு செல்லும் கிராமங்களான நம்பாக்கம், கிருஷ்ணாபுரம், ஆட்ரம்பாக்கம், ஒதப்பை, நெய்வேலி, எறையூர், பீமன்தோப்பு, கொரக்கந்தண்டலம், சோமதேவன்பட்டு, மெய்யூர், வெள்ளியூர், தாமரைப்பாக்கம், திருக்கண்டலம், ஆத்துர், பண்டிக்காவனுர், ஜெகநாதபுரம், புதுகுப்பம், கன்னிப்பாளையம், வன்னிப்பாக்கம், அசூவன்பாளையம், மடியூர், சீமாவரம், வெள்ளிவாயல்சாவடி, நாப்பாளையம், இடையான்சாவடி, மணலி, மணலி புதுநகர், சடையான்குப்பம், எண்ணூர் மற்றும் கொசஸ்தலையாற்றின் கரையின் இரு புறமும் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளனது. மேற்கூறிய பகுதிகளில் உள்ள மக்கள் அனைவரும் எச்சரிக்கையாக இருக்குமாறு கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

3வது முறையாக உடைந்த தரைப்பாலம்: ஊத்துக்கோட்டை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் பூண்டி ஏரி நிரம்பியது. இதனால் அணையின் பாதுகாப்பு கருதி, அணையிலிருந்து வினாடிக்கு 2,500 கன அடி தண்ணீர் கொசஸ்தலை ஆற்றில் திறந்து விடப்பட்டது. இந்நிலையில், கொசஸ்தலை ஆற்றின் வழித்தடமான மெய்யூர் பகுதியில் கடந்த 2021ம் ஆண்டு நவம்பர் மாதம் கரைபுரண்டு ஓடிய மழை நீரால் தரைப்பாலம் முதல் முறையாக துண்டிக்கப்பட்டது. பின்னர் 2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் 2வது முறையாக பூண்டி ஏரி திறப்பால் மீண்டும் தரைப்பாலம் உடைந்தது. இதனால் மெய்யூர் ஆவாஜிபேட்டை, வெம்பேடு, செம்பேடு, வெங்கல், மாளந்தூர், எரையூர், மொன்னவேடு, சித்தம்பாக்கம், அரும்பாக்கம், மேலானுர், மூலக்கரை உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் போக்குவரத்து வசதியின்றி அவதிப்பட்டு வந்தனர்.

மேலும் அவர்கள், திருவள்ளூர் செல்ல வேண்டுமானால் சீத்தஞ்சேரி அல்லது வெங்கல் வழியாகச் செல்ல வேண்டும். இவ்வாறு 15 முதல் 20 கிலோ மீட்டர் தூரம் வரை சுற்றிக்கொண்டு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் உடைந்து போன மெய்யூர் கிராம தரைப்பாலம் மீண்டும் சீரமைக்கப்பட்டு போக்குவரத்து தொடங்கியது. மேலும் புதிய பாலம் கட்டுமானப் பணி ₹13.50 கோடி செலவில் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் தற்போது 98 சதவீதம் முடிவடைந்து விட்டது. இன்னும் பாலத்தை இணைக்கும் சாலை மற்றும் பாலத்திற்கு வெள்ளை அடிக்கும் பணி மட்டுமே உள்ளது. இந்நிலையில் பூண்டி ஏரியில் இருந்து நேற்று 3 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டதால் மெய்யூர் கொசஸ்தலை ஆற்றின் தரைப்பாலம் நேற்று 3வது முறையாக உடைந்து விட்டது. தரைப்பாலம் துண்டிக்கப்பட்டதால் தற்காலிகமாக வாகனங்கள் அனைத்தும் புதிய பாலம் மீது அனுப்பப்பட்டு வருகின்றன.

தரைப்பாலம் மூழ்கியது
திருவள்ளூர் மாவட்டத்திலும், ஆந்திராவிலும் கடந்த சில நாட்களாக பரவலாக பெய்து வரும் கனமழை காரணமாக ஆரணியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளப்பெருக்கு காரணமாக ஆரணியின் அருகே காரணி-புதுப்பாளையம் கிராமத்திற்கு செல்லும் தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியது. இதேபோல மங்களம் கிராமத்திற்குச் செல்ல ஆற்றின் குறுக்கே மக்கள் பயன்படுத்தி வந்த பாதையும் தண்ணீரில் மூழ்கியுள்ளது. ஆற்றில் சுமார் 1 அடி உயரத்திற்கு தண்ணீர் செல்லும் நிலையில் பொதுமக்கள் ஆபத்தை உணராமல் நடந்து சென்று ஆற்றை கடக்கின்றனர். அடுத்த சில நாட்களில் மேலும் மழை பெய்தால் ஆற்றில் அதிகளவு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்படும் அபாயம் உள்ளது. போக்குவரத்து தடை செய்யப்பட்டால் காரணி, நெல்வாய், புதுப்பாளையம், மங்களம், எருக்குவாய் உள்ளிட்ட 10 கிராமங்களில் உள்ள மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு பெரியபாளையம் வழியாக 10 கி.மீ சுற்றி வரவேண்டிய சூழ்நிலை ஏற்படும். இங்கு ₹20 கோடி மதிப்பீட்டில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்படும் என அரசு கடந்தாண்டு அறிவித்த நிலையில், மேம்பால பணிகளை விரைந்து தொடங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

The post மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பூண்டி ஏரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 3 ஆயிரம் கன அடியாக உயர்வு:  தற்போது 2,500 கன அடியாக தண்ணீர் திறப்பு  தரைப்பாலங்கள் மூழ்கியதால் போக்குவரத்து துண்டிப்பு appeared first on Dinakaran.

Related Stories: