50 ஆண்டுகளாக நீடிக்கும் எல்லை பிரச்னை; அசாம், மேகாலயா எல்லையில் இரு மாநில மக்கள் மோதல்: அம்பு, கவண் கற்களை வீசி தாக்குதல்

ஷில்லாங்: அசாம், மேகாலயா எல்லையில் இருமாநிலத்தை சேர்ந்தவர்களும் அம்பு, கற்களை வீசி ஒருவரையொருவர் தாக்கி கொண்டதால் பதற்றம் ஏற்பட்டது. கடந்த 1972ம் ஆண்டு அசாம் மாநிலத்தில் இருந்து பிரிந்து மேகாலயா தனி மாநிலமாக உருவானது. அப்போது முதல் இரு மாநிலங்களுக்கும் இடையே எல்லைப் பிரச்னை நீடித்து வருகிறது. இரு மாநில எல்லையோரம் அமைந்துள்ள 36 கிராமங்களுக்கு மேகாலயா உரிமை கோரி வருகிறது. இதற்கு அசாம் மறுப்பு தெரிவிப்பதால், அவ்வப்போது எல்லையோரம் அமைந்துள்ள கிராமங்களில் மோதல் நீடிக்கிறது.

இதற்கு தீர்வு காணும் விதமாக மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மாவும், மேகாலயா முதல்வர் கான்ராட் சங்மாவும் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்னிலையில் கடந்த ஆண்டு கையெழுத்திட்டனர். எல்லையில் உள்ள 12 பகுதிகளில் 6 பகுதிகளில் எல்லைப் பிரச்னைக்கு தீர்வு ஏற்பட்டது. மீதமுள்ள 6 பகுதிகளின் பிரச்னை தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதனால் அசாம், மேகாலயா எல்லை மோதல்கள் நீடித்து வருகின்றன.

நேற்று முன்தினம் மேகாலயாவின் மேற்கு ஜெயின்டியா மலை மாவட்டத்துக்கும், அசாமின் மேற்கு கர்பி அங்லாங் மாவட்டத்துக்கும் இடையிலுள்ள கிராமத்தில் இரு மாநிலத்தை சேர்ந்தவர்களும் மோதலில் ஈடுபட்டனர். அப்போது ஒருவரையொருவர் அம்பு, கவண் கற்களை வீசி தாக்கி கொண்டனர். இந்த தாக்குதலில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த இரு மாநில காவல்துறையினர் நடத்திய சமரச பேச்சுவார்த்தையை அடுத்து மோதல் முடிவுக்கு வந்தது.

The post 50 ஆண்டுகளாக நீடிக்கும் எல்லை பிரச்னை; அசாம், மேகாலயா எல்லையில் இரு மாநில மக்கள் மோதல்: அம்பு, கவண் கற்களை வீசி தாக்குதல் appeared first on Dinakaran.

Related Stories: